ETV Bharat / state

விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் தகராறு; தம்பியை கொலை செய்த அண்ணன் தலைமறைவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 11:20 AM IST

younger Brother killed in dispute over irrigation of agricultural land
விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் தம்பி கொலை

Younger Brother Murder: விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில், தம்பி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த மாதலம்பாடி கிராமத்தில் அண்ணன் சக்கரை (72) மற்றும் தம்பி கண்ணன் (70) ஆகிய இருவரும், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் தனித்தனியே விவசாயம் செய்து வந்த நிலையில், இருவருக்கும் சொந்தமான கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில், தம்பி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்க்கரை, கண்ணன் இருவரும் தங்களது நிலத்தில் மணிலா பயிரிட்டு வந்ததாகவும், மணிலா பயிருக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் பாய்ச்சுவதில், இரண்டு பேர் இடையே மூன்று நாட்களாக தகராறு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (பிப்.17) மாலை தம்பி கண்ணன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

அப்போது சக்கரை மற்றும் அவரது மகன்கள் ஞானசேகர், செல்வமணி மற்றும் சித்தி மகன் வேடி ஆகியோருக்கும், கண்ணன் குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கைகலப்பில் அண்ணன் சக்கரை, கண்ணனை கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் உயிருக்குப் போராடிய நிலையில், உறவினர்களால் ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு கண்ணனை பரிசோதித்த மருத்துவர்கள், கண்ணன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதலில் காயமடைந்த கண்ணனின் குடும்பத்தைச் சேர்ந்த வேடி, அன்பழகன், சாந்தி, பரணிதரன் ஆகிய நால்வரும் மற்றும் சக்கரை குடும்பத்தைச் சேர்ந்த வேடி என்பவரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மங்கலம் காவல் நிலைய போலீசார், கண்ணனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அண்ணன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடும் பணியிலும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, சர்க்கரையின் மகன்களான ஞானசேகர் மற்றும் செல்வமணி ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பியைக் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: “திமுக உடன் கூட்டணிதான்.. காங்கிரஸ்-க்கு ஆதரவில்லை” - வேல்முருகன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.