ETV Bharat / state

அமைச்சர்கள் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 7, 2024, 8:52 PM IST

why-is-dvac-changing-its-stance-only-in-case-of-ministers-madras-high-court-question
அமைச்சர்கள் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Minister KKSSR Ramachandran assets case: மாநில விசாரணை அமைப்பான லஞ்ச ஒழிப்புத்துறை தனது நிலைப்பாட்டை அமைச்சர்கள் வழக்கில் மட்டும் ஏன் மாற்றிக் கொள்கிறது? என தெரியவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை: கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரூபாய் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாகச் சோ்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் எடுத்தார்.

இதனையடுத்து தற்போது இந்த வழக்கின் இறுதி விசாரணை தொடங்கியது. அப்போது, அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றப்பத்திரிக்கையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. சொத்து விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை, அப்போலோ மருத்துவமனைக்குச் செலுத்திய ரூபாய் 23 லட்சம் மீண்டும் திரும்பப் பெறப்பட்டதை எப்படிச் சட்டவிரோத வருமானம் என சொல்ல முடியும்? என தெரிவித்தார்.

மேலும், சுலோச்சனா தியேட்டர் வருமானம் மற்றும் 2007-2008 வரை 6 இடங்கள் விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. நிலப்பத்திரம் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்யாமல் முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் இருக்கும் உறவினர்கள் வருமானத்தையும் சேர்த்துக் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் வருமானமாகக் குறிப்பிட்டுள்ளது.

விசாரணை அதிகாரியான கண்காணிப்பாளரைச் சிறப்பு நீதிமன்றம் நேரில் விசாரணை செய்து போதுமான ஆதாரங்கள் வழக்கில் இல்லை என்ற அடிப்படையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். முதல் குற்றப்பத்திரிக்கை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிக்கை முரண்பட்டு இருப்பதாக நீதிமன்றம் கருதினால் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்யலாம் என தீர்ப்புகள் உள்ளது என குறிப்பிட்டார்.

இதையடுத்து, விசாரணை அமைப்பான லஞ்ச ஒழிப்புத்துறை தனது நிலைப்பாட்டை அமைச்சர்கள் வழக்கில் மட்டும் ஏன் மாற்றிக் கொள்கிறது? என தெரியவில்லை. மற்ற வழக்குகளில் இந்து நிலைப்பாடு இல்லையே என கண்டனம் தெரிவித்த நீதிபதி விசாரணையை நாளை மார்ச் 08 ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்; சமுதாய வானொலி துவக்க விழா ரத்து? என்ன சொல்கிறார் துணைவேந்தர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.