ETV Bharat / state

அலறும் நெல்லை.. யார் இந்த தீபக் ராஜா? முக்கிய புள்ளியாக உருவானது எப்படி? - Who is Nellai Deepak Raja

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 7:10 PM IST

Nellai murder case: நெல்லையில் கொலை செய்யப்பட்ட தீபக் ராஜா பசுபதி பாண்டியனின் மறைவுக்கு பிறகுதான் ரவுடியாக உருவெடுத்துள்ளார்.

தீபக் ராஜா
தீபக் ராஜா (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல் என்றால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் தான் முக்கிய பங்கு வகிக்கும். கராத்தே செல்வின், பசுபதி பாண்டியன், வெங்கடேஷ் பண்ணையார், சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா என பல்வேறு சாதி அமைப்பு தலைவர்கள் குற்றp பின்னணியோடு தென் மாவட்டங்களில் வலம் வந்தனர். இதில் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த பசுபதி பாண்டியனுக்கும், வெங்கடேஷ் பண்ணையாருக்கும் இடையேதான் முதலில் பகை ஏற்பட்டதாக அறியப்படுகிறது.

பசுபதி பாண்டியன் கொலை: இந்த பகையின் வெளிப்பாடாக இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். மேலும், 2012ஆம் ஆண்டு பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டார். இந்த நேரத்தில் தான் தீபக் ராஜா, பசுபதி பாண்டியனுக்கு தீவிர ஆதரவாக இருந்தார். தனது தலைவர் கொலை செய்யப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தீபக் ராஜா அவரது கொலைக்கு பழிக்குப் பழியாக எதிர் தரப்பினரை பழிவாங்கும் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

சுபாஷ் பண்ணையாருக்கு ஸ்கெட்ச்: அதன் எதிரொலியாக தான், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையில் சுபாஷ் பண்ணையார் தோட்டத்தில் வைத்து ஒரு கும்பல் சுபாஷ் பண்ணையாரை தீர்த்துக்கட்ட களமிறங்கியது. ஆனால், அந்த முயற்சியில் சுபாஷ் பண்ணையார் தப்பி விடவே, அங்கு மாட்டிக்கொண்ட அவரது ஆதரவாளர்கள் இரண்டு பேரை கொடூரமாக கும்பல் கொலை செய்தது. அதில் தீபக் ராஜாவும் ஒருவர் என கூறப்படுகிறது.

ஒரு பக்கம் தீபக் ராஜா பசுபதி பாண்டியன் மறைவுக்குப் பிறகு தனது சமுதாய மக்களுக்காக குரல் கொடுக்கும் நபராக வளர்ந்து வந்தார். மேலும், நெல்லையைச் சேர்ந்த கண்ணபிரானுடன் இணைந்து பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட நிலையில், ஒரு கட்டத்தில் தீபக் ராஜா கண்ணபிரானை பிரிந்து தனி ஆளாக செயல்படத் தொடங்கினார்.

குறிப்பாக, ஒரு தலைவரைப் போன்று தனக்குப் பின்னால் சிலரை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்ற பொது மேடைகளில் பேசுவது, தனது சமுதாயத்தில் யாராவது இறந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவது என பல செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

கொலை வழக்குகளில் தொடர்பு: மறுபுறம் பழி வாங்கும் படலத்தையும் தொடர்ந்து வந்தார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டு அருகே நடைபெற்ற இரட்டை கொலை, நெல்லை தாழையூயத்தில் நடைபெற்ற கட்டிட காண்ட்ராக்டர் கண்ணன் கொலை என பல கொலை வழக்கில் சம்பந்தப்பட்டார். அதேபோல், சமூக வலைத்தளங்களில் தனது சமூகத்துக்கு எதிராக நினைப்பவர்களை மறைமுகமாக ஆக்ரோஷமாக பேசியும் வந்துள்ளார்.

அடுத்த மாதம் திருமணம்: மேலும், தனது சமுதாய இளைஞர்களை நன்றாக படிக்கும் படியும், அவர்களுக்காகத் தான் நாங்கள் களத்தில் இறங்கி வேலை செய்கிறோம் என்றும் பேசி வந்துள்ளார். இது போன்ற மறைமுகமாக ஒரு பெரிய சாதி தலைவராக செயல்பட்டு வந்த தீபக் ராஜா, பெரும்பாலும் தலைமறைவான வாழ்க்கையையே வாழ்ந்து வந்துள்ளார்.

மேலும், தனக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதால், தீபக் ராஜா பெரும்பாலும் சொந்த ஊரில் இருந்ததில்லை. அவ்வளவு கவனமாக இருந்த தீபக் ராஜா, தனது காதலியின் அழைப்பை ஏற்று சம்பவத்தன்று தனியாக வந்த போது தான் மர்ம் கும்பலிடம் சிக்கிக் கொண்டுள்ளார்.

எனவே, தீபக் ராஜா பழிக்குப் பழியாக கொல்லப்பட்டிருக்கலாம் என்பதுதான் போலீசாரின் ஒட்டுமொத்த சந்தேகமாக உள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட தீபக் ராஜாவுக்கு தனது காதலியோடு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீபக் ராஜா கொலை எதிரொலி.. பழைய ரவுடிகளுக்கு பாதுகாப்பு.. பதற்றத்தில் தென் மாவட்டங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.