ETV Bharat / state

ஒரே நாடு ஒரே தேர்தலை திரும்பப் பெற தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தாக்கல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 8:33 AM IST

Updated : Feb 14, 2024, 1:08 PM IST

Etv Bharat
Etv Bharat

Tamil Nadu Budget session 2024: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரின் 3வது நாள் அமர்வு இன்று (பிப்.14) நடைபெற உள்ள நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.

சென்னை : நடப்பாண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாள் அமர்வு நேற்று (பிப். 13) நடைபெற்றது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகளும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் வெங்கிடரமணன், கண் டாக்டர் பத்ரிநாத், தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக முன்னாள் தலைமைச் செயலாளரும், ஒடிசாவின் முன்னாள் ஆளுநருமான ராஜேந்திரன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் விவாதம் தொடங்கி நடைபெற்றது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இந்நிலையில், இன்று (பிப். 14) தமிழக சட்டசபையில் 3வது நாள் அமர்வு நடைபெறுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.14) தனி தீர்மானம் கொண்டு வர உள்ளார். இது தொடர்பான முன்மொழிவில், 2026 ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.

ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும், அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும், இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும், அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் ஒரு நாடு ஒரு தேர்தல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டம் - பறந்தது தலைமை செயலரின் உத்தரவு! என்ன நடவடிக்கை தெரியுமா?

Last Updated :Feb 14, 2024, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.