ETV Bharat / state

சத்தியமங்கலம், தாளாவாடி மலைக்கிராம வாக்குச்சாவடிகளுக்கு வந்தடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 4:20 PM IST

Voting machines to polling stations
Voting machines

Voting machines to polling stations: வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள சத்தியமங்கலம், தாளவாடி உள்ளிட்ட மலைக்கிராம வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

ஈரோடு: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால், நேற்று மாலையோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி, கடம்பூர், கேர்மாளம் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள மலைக்கிராமங்களின் வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று (வியாழக்கிழமை) எடுத்துச் செல்லப்பட்டன.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக பவானிசாகர் தொகுதியானது, 29 மண்டங்களாக பிரிக்கப்பட்டு, 295 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அடர்ந்த காட்டுப் பகுதியான தாளவாடி, கடம்பூர் மற்றும் கேர்மாளம் ஆகிய மலைக்கிராமங்களில் 127 இடங்களில் வெப் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி, ஈரோடு மாவட்டத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணியில், பவானிசாகர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமா சங்கர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று ஈடுபட்டனர். முன்னதாக, ஜோனல் அதிகாரிகளுடன் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அவற்றுடன் கண்ட்ரோல் யூனிட், விவிபேட் இயந்திரங்கள், பழுது ஏற்பாட்டால் மாற்று இயந்திரங்கள், வாக்காளர் பதிவு படிவம், அழியாத மை, ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் பசை உள்ளிட்ட 36 வகையான பொருட்கள் முதற்கட்டமாக சிறுத்தை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் தாளவாடி மலைக்கிராம வாக்குச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் வாகனத்தில், வனப் பாதுகாப்புபடை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மலைப்பகுதி வாக்குப்பதிவு மையங்களில் வனவிலங்குகளின் தொந்தரவுகளை கட்டுப்படுத்த வயர்லெஸ் தகவல் தொழில்நுட்பத்துடன் வனத்துறையினருடன், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வாக்குச்சாவடிக்கு சென்றனர். தொலைத்தொடர்பு வசதி இல்லாத வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு கொள்ள வயர்லெஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவை பூலுவபட்டி அருகே பாஜகவினர் பணப்பட்டுவாடா முயற்சி.. ரூ.81 ஆயிரத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.