விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி யாருக்கு.. களம் யாருக்கு சாதகம்? - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 12:34 PM IST

Villupuram Constituency

Villupuram Constituency: விழுப்புரம் தனி தொகுதியில் திமுக, அதிமுக, நாதக மற்றும் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசியல் செல்வாக்கு மிகுந்த தொகுதியாக விளங்கும் விழுப்புரம் தொகுதியில் வெற்றி யாருக்கு சாதகம்? கள நிலவரம் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

விழுப்புரம்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க தொகுதியான விழுப்புரம் தொகுதியில் நடைபெறும் தேர்தல் ரேஸில், வெற்றிக் கனியை எட்டப்போகும் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியிலும், அரசியல் ஆளுமைகளிடையேவும் மிகுந்து காணப்படுகிறது.

விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டுள்ள விழுப்புரம் தொகுதியில், நெல் மற்றும் கரும்பு சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் இப்பகுதி அமைந்துள்ளதால், இங்கு கரும்பு அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. ஆகையால், இப்பகுதியில் கரும்பு ஆலைகளும் அதிக அளவில் உள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, 2009ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. அந்த வகையில், விழுப்புரம் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், அதிமுக 2 முறையும், திமுக ஒரு முறையும் வென்றுள்ளது.

தற்போதைய சூழலில், விழுப்புரம் தொகுதியில் ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ரவிக்குமார், அதிமுக சார்பில் பாக்யராஜ், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் முரளிசங்கர் மற்றும் நாதக சார்பில் மு.களஞ்சியம் போட்டியிடுகின்றனர். இதில், கடந்த 2019ல் நடைபெற்ற தேர்தலில், திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட துரை.ரவிக்குமார் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ரவிக்குமாருக்கு வெற்றி கிடைக்குமா?: கடந்த முறை திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரவிக்குமார், இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதி மக்களின் ஆதரவால் எம்.பி-யான ரவிக்குமார், தொகுதிக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு, பலமாக எழுகிறது.

அதுமட்டுமன்றி, கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியிலுள்ள சொந்த கட்சியினரிடமும், கூட்டணி கட்சியினரிடமும் தொடர்பில்லாமல் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் ரவிக்குமார் நின்றதால் திமுகவினர் ஆர்வமுடன் தேர்தல் பணியில் ஈடுப்பட்டதாகவும், இம்முறை பானை சின்னத்தில் போட்டியிடுவதை, திமுகவினர் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

தொகுதி மக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் ரவிக்குமாருக்கு அதிருப்திகள் சில இருப்பினும், மாநில அளவிலான பல்வேறு பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்து, அதற்கான தீர்வுகளை நோக்கி அரசு எந்திரத்தை செயல்பட வைத்ததில், அவருக்கு தனி இடம் உண்டு என்பதே நிதர்சனம். மேலும் முற்போக்கு சிந்தனையுடன் ஊடகத்துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு ஒரு சிறந்த எழுத்தாளராகவும், அரசியல் விமர்சகராகவும் செயல்பட்டு வருகிறார் ரவிக்குமார்.

அதிமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறதா?: அதிமுக வேட்பாளரான பாக்யராஜ் அதிமுகவினருக்கும், தொகுதி மக்களுக்கும் நன்கு அறிமுகமானவர். நான்கு முனை போட்டி களத்திற்குள் இருந்த இவர், தற்போது திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான ரவிக்குமாரை பின்னுக்கு தள்ளிவிட்டு, முதலிடத்திற்கு வந்திருப்பதாக சில பேச்சு அடிபடுகிறது. அதிமுகவினரின் தேர்தல் பணிகள் மட்டும் இதற்கு காரணமல்ல. இதனைவிட சி.வி.சண்முகம் சத்தமில்லாமல் செய்து வரும் தேர்தல் பணிகளும் முக்கிய காரணமாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

சி.வி.சண்முகத்தின் திட்டம் என்ன?: விழுப்புரம் தொகுதியை சத்தமே இல்லாமல் கைப்பற்றும் வேலைகளில் அதிமுகவைச் சேரந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் வியூகம் வகுத்து பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. வன்னியர்களை அதிகம் கொண்ட தொகுதி விழுப்புரம் என்பதால், தானே நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார், சி.வி.சண்முகம்.

பாமகவை, அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர பெரும் முயற்சி செய்தார். ஆனால் பாஜகவுடன் பாமக சென்றதால், பாஜகவை முழுமையாக எதிர்க்க தொடங்கிய அதிமுக தலைவர்களில் முதன்மையானவராக இருக்கும் இவர், பாஜக கூட்டணியை எதிர்த்து தீவிரமாக களமிறங்கி இருக்கிறார். பாமகவிற்கு அடுத்து வன்னியர் சமூகத்தின் முக்கிய நபராக விழுப்புரம் தொகுதியில் வலம் வருபவர் சி.வி.சண்முகம்.

எனவே, கிராமப்புறங்களில் கணிசமாக வாக்கு வங்கிகளை வைத்துள்ள வன்னியர் சமூக பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற ஆதரவு திரட்டி வருகிறார் என்கின்ற பேச்சும் எழுகிறது. அதேவேளை, பாமகவிற்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரப்படுத்தி, வன்னியர் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் அவரது பிரச்சாரங்களும், தேர்தல் பணிகளும் தற்போது அமைந்திருக்கிறது.

மேலும், பாமக வேட்பாளரான முரளிசங்கர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை அழுத்தம் திருத்தமாக தொகுதியில் பதிவுசெய்து வருகிறார். இவற்றுக்கெல்லாம் மேலாக, அதிமுக தலைமையில் தனக்கான செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள, இந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற முடிவோடு களமிறங்கி இருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

பாமக வேட்பாளர் வெளிமாவட்டத்துக்காரர் என்பதையும், திமுக வேட்பாளர் மீதுள்ள அதிருப்தியும் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, விழுப்புரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை முன்னணிக்கு கொண்டு வந்திருக்கிறார். விழுப்புரம் தொகுதியின் தேர்தல் களத்தில் சி.வி.சண்முகத்தின் கைதான் ஓங்கியிருப்பதாகவும், இனிவரும் காலங்களில் சி.வி.சண்முகம் இதே வேகத்தில் தொகுதியில் இருந்தால், அதிமுக வெற்றிபெற வாய்ப்பு உண்டு என்கின்றனர், தொகுதி வாசிகள்.

சூடு பிடித்திருக்கும் விழுப்புரம் தொகுதி: இது ஒருபுறம் இருக்க பல மொழிகளில் பேசுபவராக பாமகவின் முரளி சங்கரும், 'நாங்க மக்களுடன் தான் கூட்டணி' என கொளுத்தும் வெயிலில் கூரை இல்லா வாகனத்தில் வலம் வரும் நாதக களஞ்சியமும், நான் தான் இங்க ராஜா என நடனமாடி‌‌, பாட்டு பாடி வாக்கு சேகரிக்கும் அமைச்சர் பொன்முடியும், இஸ்திரி போட்டு வாக்கு சேகரிக்கும் அவருடைய மகன் பொன் கௌதம சிகாமணியும், மாட்டு வண்டியில் வாக்கு சேகரிக்கும் பாக்கியராஜ் என விழுப்புரமே திருவிழாவாகத் திகழ்கிறது.

என்னதான் சிறு தலைகளை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தாலும், எடப்பாடி பழனிச்சாமி போன்ற பெரிய தலை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு வரும்பொழுது, மக்கள் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது இருக்கைகளை விட்டு சென்ற சம்பவம், மக்கள் யாருக்கு தான் ஓட்டு போட போகிறார்கள் என்கின்ற நிலைப்பாடு எதார்த்தமான ஓர் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தவுடன், நாளை மறுதினம் ஒரு விரல் புரட்சிக்காக மக்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: திருச்சி தொகுதியில் திருப்புமுனையை ஏற்படுத்தப்போவது யார்.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.