ETV Bharat / state

கொங்கு எழுச்சி மாநாட்டில் வாகனப் பேரணி அட்ராசிட்டி.. நெடுஞ்சாலையில் சீறிப்பாய்ந்த வாகனங்களால் பரபரப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 5, 2024, 11:27 AM IST

vehicle rally atrocity at kongu uprising conference
கொங்கு எழுச்சி மாநாட்டில் நடைபெற்ற வாகனப் பேரணி அட்ராசிட்டி

ஈரோட்டில் நடைபெற்ற கொங்கு எழுச்சி மாநாட்டில் பங்கேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தொண்டர்கள், காவல்துறையினர் முன்பாகவே நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் அட்ராசிட்டி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொங்கு எழுச்சி மாநாட்டில் நடைபெற்ற வாகனப் பேரணி அட்ராசிட்டி

ஈரோடு: பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் 'கொங்கு எழுச்சி மாநாடு' நேற்று (பிப்.4) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு, மாநாடானது காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் தீரன் சின்னமலையின் நினைவு தினம், ஆடிப்பெருக்கு விழா நாட்கள் மற்றும் திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா உள்ளிட்ட நாட்களில், பல்வேறு கட்சியினர் விதிமுறைக்கு மாறாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வாகனப் பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக வருவது வழக்கமாக உள்ளது.

இவ்வாறு ஊர்வலமாக வரும் பெரும்பாலான இரு சக்கர வாகனங்களில் சட்டத்திற்கு புறம்பாக மூன்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து, தலைக்கவசம் அணியாமலும், அதிக ஒளி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பொருத்தியும், மேலும் நான்கு சக்கர வாகனத்தின் மீது ஏறி கூச்சலிட்டும், ஆரவாரம் செய்து வாகனப் பேரணியை நடத்துகின்றனர்.

இது இங்கு தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்கு எழுச்சி மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் பலரும், காவல்துறையினர் முன்பாகவே அதிக சத்தம் எழுப்பிய படி தலைக்கவசம் அணியாமல் தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் வட்டமடித்து ஆரவாரம் செய்தனர்.

இந்த நிலையில், இதனைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர் செய்வதறியாது வேடிக்கைப் பார்த்த வண்ணம் நின்றதாகக் கூறப்படுகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளில் அனுமதி அளிக்கும் போதே தமிழக அரசும், காவல்துறையும் இரண்டு சக்கர வாகனங்களில் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக வாகனப் பேரணியை நடத்தினால், மாநாட்டிற்கு அனுமதி வழங்க முடியாது எனக் கூற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் வாகனத் தணிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர், மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக சாலையில் பயணிக்கும் ஏழை எளிய மக்களை தடுத்து நிறுத்தி, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தொடர்கதை ஆகி வரும் வாகனப் பேரணி என்ற பெயரில் நடக்கும் அட்ராசிட்டியை கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

மேலும், இதன் மூலம் புதிய பைக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம், அந்தந்த கட்சியின் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் இதுபோன்ற பைக் சாகசத்தில் ஈடுபடுவதை தடுக்காமல் ஊக்குவிப்பது, விலைமதிப்பற்ற உயிர்கள் பல பலியாவதற்கு வழிவகை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 'கண்டா வரச் சொல்லுங்க' வைரலாகும் போஸ்டர் யாரை வரவேற்க..தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.