ETV Bharat / state

மிளகாய்ப்பொடி தூவி வாகனம் வழிமறிப்பு.. பழ வியாபாரி மீது சரமாரி தாக்குதல்! - Thanjavur Youth murder

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 10:02 AM IST

Etv Bharat
Etv Bharat

Thanjavur Youth murder: தஞ்சாவூரில் சரக்கு வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சரக்கு வாகனத்தை வழிமறித்து மர்ம நபர்கள் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மோதிலால் தெருவைச் சேர்ந்தவர் அப்பு என்கிற ஹரிகரன் (26). இவர் நீடாமங்கலத்தில் பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வியாபாரத்திற்காக ஹரிகரன், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் (24) என்பவரோடு சரக்கு வாகனத்தில், ராஜமுருகன் (19) என்பவருடன் திருச்சிக்குச் சென்றுள்ளார்.

அப்போது, வாகனம் தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வல்லம் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில், பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த வினோத் மீது மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர். இதனால், நிலை தடுமாறி வினோத் வாகனத்தை சாலையில் நிறுத்தியுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பட்டா கத்தியால் வினோத்தை தாக்கியுள்ளனர். இதனையடுத்து, வாகனத்தில் இருந்த ஹரிகரன் மற்றும் ராஜமுருகன் ஆகிய இருவரும் தப்பி ஓடியுள்ளனர். ஆனால், ஹரிகரனைச் சுற்றி வளைத்த மர்ம நபர்கள் பட்டா கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஹரிகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, மர்ம நபர்கள் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை சாலையிலேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வல்லம் காவல் நிலைய போலீசார், இறந்த ஹரிகரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜமுருகன் மற்றும் வினோத் ஆகிய இருவரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவிகளுக்குத் தவறான பாதை.. நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு.. வழக்கு கடந்து வந்த பாதை! - Nirmala Devi Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.