ETV Bharat / state

"தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வு; என் மண், என் மக்கள் நிறைவு விழா" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 4:08 PM IST

Union Minister L.Murugan
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

Union Minister L.Murugan: தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாக 'என் மண் என் மக்கள்' நிறைவு விழா பார்க்கப்படுகிறது எனவும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய நிர்வாகி சம்பந்தமான விளக்கத்தைப் பொதுமக்களுக்குக் கொடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசினார்.

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமானம் மூலம் சென்னையிலிருந்து கோயம்புத்தூர்க்கு வருகை தந்தார்.

பின்னர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நாளை (பிப்.27) திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் மிகப் பிரமாண்டமாக நடைபெறுகின்றது.

எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்யாத அளவிற்குப் பிரமாண்டமாக மாநாடு நடைபெற இருக்கின்றது. இந்த என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வது தமிழக அரசியலில் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

என் மண் என் மக்கள் யாத்திரை திமுக ஆட்சியின் ஊழல்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் யாத்திரையாகவும், திமுக கட்சியின் இயலாமையை எடுத்துச் செல்லும் விதமாகவும், பிரதமர் மோடி ஆட்சியின் 10 ஆண்டு காலச் சாதனையை மக்களிடையே எடுத்துச் செல்லும் யாத்திரையாக அமைந்தது.

மேலும், 234 தொகுதிகளிலும் இந்த யாத்திரை மிக வெற்றிகரமாக முடிவுற்று அனைத்துத் தரப்பு மக்களும் மிக ஆரவாரத்தோடு அன்போடு யாத்திரைக்கு வரவேற்பளித்தார்கள். தமிழகத்தில் கிராமம் தோறும், போதைப்பொருள்கள் ஊடுருவிப் போயிருக்கிறது. இதற்கு உதாரணமாக திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்குப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது வெளி உலகத்திற்குத் தெரிய வந்துள்ளது.

இதில், திமுக எந்த அளவிற்குக் கடத்தல் காரர்களைப் பாதுகாத்து இருக்கிறார்கள் என வெளிச்சத்தில் தெரிய வந்துள்ளது. இதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய நிர்வாகி சம்பந்தமான விளக்கத்தைப் பொதுமக்களுக்குக் கொடுக்க வேண்டும் எனத் தமிழக மக்கள் விரும்புகின்றனர் என்று கூறினார்.

இதையும் படிங்க: உயர் நீதிமன்ற உத்தரவின்படி நடந்த ஆதி கருவண்ணராயர் கோயில் பொங்கல் திருவிழா.. ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.