ETV Bharat / state

தேனி விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு; இரண்டு வனத்துறை அதிகாரிகள் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 4:13 PM IST

Etv Bharat
Etv Bharat

Forest Officers Arrested: தேனி மாவட்டம் கூடலூர் அருகே தோட்டத்து வேலைக்குச் சென்ற விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வனத்துறை அதிகாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தேனி: தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன் (55). இவர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இரவு, வண்ணத்திப்பாறை பகுதியில் உள்ள தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாய கூலி வேலைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அருகில் உள்ள வனப்பகுதிக்குள் ஈஸ்வரன் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட மின்சார வேலி அமைத்து இருந்ததாகவும், அதைத் தடுக்க முயன்ற வனத்துறை அதிகாரிகளை அரிவாளை காட்டி கொலை முயற்சி செய்ததாகக் கூறி ஈஸ்வரன் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், தோட்டத்து வேலைக்குச் சென்ற கூலித்தொழிலாளி ஈஸ்வரனை வனத்துறையினர் முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக்கிளையில், விவசாயி ஈஸ்வரனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், ஈஸ்வரன் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி, உறவினர்கள் கூடலூர் வனத்துறை அதிகாரிகள் 11 பேர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தியது. இதை அடுத்து, வழக்கில் தொடர்புடைய வனவர் திருமுருகன், வனக்காப்பாளர் ஜார்ஜ் என்ற பென்னிகுட்டி ஆகிய இரண்டு வனத்துறை அதிகாரிகளை குமுளி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காவல்துறை விசாரணைக்கு தயார்.. ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீண்டும் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.