ETV Bharat / state

திருவாரூரில் கார் - பைக் மோதல்; அரசு ஊழியர் உள்பட இருவர் உயிரிழப்பு! - Tiruvarur bike accident

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 8:08 PM IST

Thiruvarur NH accident: திருவாரூர் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், அரசு ஊழியர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் உறவினர்கள் புகைப்படம்
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் புகைப்படம் (credits to Etv Bharat Tamil Nadu)

திருவாரூர்: தஞ்சாவூர் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தவர் ராஜி (55). இவர் திருவாரூரில் நாளை (மே 5) நடைபெறவுள்ள தனது உறவினர் வீட்டு காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக, தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது தஞ்சாவூர் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் அம்மையப்பன் என்ற இடத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார், அவரது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ராஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரில், கரூர் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி தேவாலயத்தில் தரிசனம் செய்து விட்டு மீண்டும் கரூருக்குச் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வந்துள்ளனர். இந்நிலையில், காரின் முன்பக்கத்தில் அமர்ந்து பயணித்து வந்த பழனியம்மாள் (70) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த மலையப்பசாமி (46), அவரது மனைவி கண்ணகி (36), மகள் கபிஶ்ரீ (16), உறவினர் காளியம்மாள் (50) ஆகியோர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்த செய்தி அறிந்த கொடாச்சேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த ராஜியின் உறவினர்கள் மருத்துவமனை வாயிலில் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவாரூர் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணிகள் முழுவதும் நிறைவடையாத நிலையில், அங்கு உரிய வேகத்தடைகள் அமைக்கப்படாமலும், வழியில் பேரி கார்டுகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ள காரணத்தினாலும், இரவு நேரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்படாத காரணத்தினாலும் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுத்து, முழுவதுமாக பணிகள் நிறைவடைந்த பின் இந்த சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: “அரசுப் பேருந்தில் பயணம் செய்ய மக்களிடையே அச்சம்” - எடப்பாடி பழனிசாமி தாக்கு! - EPS IN SALEM HOSPITAL

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.