ETV Bharat / state

புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள்: காவிரி முதல் வைகை வரை பட்ஜெட்டில் அறிவிப்புகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 11:41 AM IST

Updated : Feb 19, 2024, 3:15 PM IST

Tamilnadu Budget 2024: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.25,858 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tamilnadu Budget
குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 25,858 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(பிப்.19) பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில், குடிநீர் வழங்கல் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.7,890 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் மாநகராட்சி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களில் அமைந்துள்ள 6,802 ஊரகக் குடியிருப்புகளில் வசித்து வரும் 40 லட்சம் மக்கள் பயனடைவர். அப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் உதவும்.

மேலும், கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சியிலுள்ள சுமார் 65,000 மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வழங்கும் பொருட்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்திற்குத் தேவையான நீரை வழங்கும் பொருட்டும், ஒரு கூட்டுக் குடிநீர்த்திட்டம் ரூ.366 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி, கபிலர்மலை மற்றும் பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களிலுள்ள 216 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக்குடிநீர்த் திட்டம் ரூ.358 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்டு திண்டுக்கல் மாநகராட்சி சின்னாளப்பட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 425 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு புதிய கூட்டுக்குடிநீர்த் திட்டம் ரூ.565 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும்.

இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.25,858 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

Last Updated : Feb 19, 2024, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.