ETV Bharat / state

"வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை" - டிடிவி தினகரன் பகீர் பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 8:01 PM IST

AMMK President TTV Dhinakaran
டிடிவி தினகரன்

TTV Dinakaran: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் எந்த தொகுதியிலும் போட்டியிடப்போவதில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

டிடிவி தினகரன் பேட்டி

சேலம்: சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் இன்று (ஜன.28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "சேலத்தில் ஏற்கனவே இருந்த வீரபாண்டியார் மறைந்து விட்டார். தற்போது சேலத்தில் இருக்கும் வீரபாண்டியார் எஸ்.கே.செல்வம் தான். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தேர்தலில் போட்டியிட நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்.

கழகப் பணிக்காகவும், தேர்தலில் போட்டியிடும் நமது கட்சி வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபட உள்ளேன். இதற்காக தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. தேவைப்பட்டால் கூட்டணிக் கட்சி இல்லாது தனியாக கூட போட்டியிடுவேன். தேர்தலில் வெற்றி தோல்விகளை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல அமமுக தொண்டர்கள், நானும் அப்படித்தான்.

யாரால் ஆட்சிக்கு வந்தோமோ, அவர்களுக்கு துரோகம், ஆட்சிக்கு பிரச்சனை வந்த போது கை கொடுத்தவர்களுக்கு துரோகம் என துரோகம், பேராசை, பதவி வெறி தவிர எடப்பாடி பழனிச்சாமியிடம் வேறு எதுவும் இல்லை. துரோகத்தின் கையில் சிக்கி உள்ளதால் இரட்டை இலை சின்னமும் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் அமமுகவில் இணைவார்கள். பணம் மூட்டைகளை மட்டும் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியால் ரொம்ப தூரம் செல்ல முடியாது. வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தான் எடப்பாடி பழனிசாமி எடுத்த தவறான முடிவு.

ஒட்டுமொத்த வன்னிய சமுதாயத்தினரும் அவர் மீது கோபத்தில் உள்ளனர். அதேபோல தென்மாவட்டங்களில் உள்ள நூற்றி ஒன்பது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் எடப்பாடி பழனிசாமி மீது கடும் கோபத்தில் உள்ளனர். அது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் வன்னியர்களின் வாக்குகளை பெற எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிய திட்டம் தற்போது அவருக்கு எதிராகவே திரும்பி உள்ளது.

இது எதிர்வரும் தேர்தலின் போது வெளிப்படும். எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கம்பெனி போல நடத்தி வருகிறார். இது அவருக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும். இத்தனை ஆண்டுகள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு தற்போது இஸ்லாமியர்களுக்கு காவலனாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் ஊழல் ஆட்சி நடைபெற்றதால் தற்போது முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது ஊழல் வழக்குகள் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மதுரையில் புளியோதரை மாநாடு நடத்தினார். இதனால் திமுகவினர் சேலத்தில் பிரியாணி மாநாடு நடத்தினர். 520 வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்றி எடப்பாடிக்கு தாத்தா என காட்டியுள்ளார் ஸ்டாலின். மக்களை ஏமாற்றுவது அவர்களது ஒரே சாதனை.

திமுகவிற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மாற்று சக்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் என மக்கள் நம்புகின்றனர். எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். மதுரை மாநாட்டில் துரோகம் செய்த சாதனையாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, புரட்சித் தமிழர் என்ற பட்டத்திற்கு பதிலாக புரட்டுத் தமிழர் என்ற பட்டம் தான் அளித்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - தொகுதி பங்கீடு பட்டியல் வெளியீடா? காங்கிரஸ் திட்டவட்ட மறுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.