ETV Bharat / state

வடமாநில தொழிலாளர்கள் குழந்தை கடத்துவதாகப் பரவும் தகவல் உண்மை இல்லை... வதந்தி குறித்து திருச்சி எஸ்.பி விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 12:58 PM IST

trichy sp explain northern states laborers are kidnapping children is a rumor
குழந்தை கடத்தல் வதந்தி என திருச்சி எஸ்.பி., விளக்கம்

Child Abduction Issue: வடமாநில தொழிலாளர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை என்றும், சந்தேகத்தின் பேரில் யார் மீதும் தாக்குதல் நடத்தக் கூடாது எனவும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்துள்ளார்.

குழந்தை கடத்தல் வதந்தி என திருச்சி எஸ்.பி., விளக்கம்

திருச்சி: வடமாநில தொழிலாளர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை எனவும் தமிழகத்தில் லட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணி செய்து வருவதால், பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் யார் மீதும் தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி வருண் குமார், "குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் அதிகளவு பரவி வருகிறது. மேலும், வடமாநில தொழிலாளர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக வீடியோ மற்றும் ஆடியோ வாட்ஸ் ஆப்பில் பரவி வருவதைக் காண முடிகிறது. இது முற்றிலும் வதந்தியே. தமிழகத்தில் அத்தகைய சூழல் ஏதும் இல்லை.

தமிழகம் முழுவதும் 10 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். எல்லா இடங்களிலும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதேபோல், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருச்சியிலும் அதிக அளவில் உள்ளனர். அவர்களைக் குழந்தைக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் எனத் தவறாக எண்ணி, பொதுமக்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிடக் கூடாது.

வதந்திகளை நம்பி சிலர் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனே தாக்குதலில் ஈடுபடாமல், முதலில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பேரில், உண்மை என்ன என்பதை ஆராய்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும், சமூக வலைத்தளத்தில் குழந்தைக் கடத்தல் தொடர்பாகப் பொய் செய்தியைப் பரப்பினால், அவர்கள் மீது கடும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை கடத்தல் தொடர்பாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்த, அனைத்து காவல்துறை ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும், திருச்சி மாவட்டத்தில் பெரிய அளவு போதைப் பொருள் புழக்கம் இல்லை எனக் கூறி அவர், தேசிய நெடுஞ்சாலையில் திருநங்கைகள் நிற்பதைத் தடுப்பதற்கு, 30 காவலர்கள் இருசக்கர வாகனத்தில் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார். அதோடு, தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், பைக் வீலிங் மற்றும் சாகசம் செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் காவல்துறை மீது நம்பிக்கை வைத்து 100 என்ற எண்ணை அழைக்குமாறும், அதிகபட்சமாக 10 நிமிடத்திற்குள் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விடுவார்கள் என்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெண்கள் பெண்ணியம் என்ற பெயரில் தங்கள் திறமைகளை மறந்து விடக்கூடாது - மருத்துவர் சுதா சேஷையன் அறிவுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.