ETV Bharat / state

பதுங்கியிருக்கும் சிறுத்தை, வலை விரிக்கும் வனத்துறை! - பொதுமக்களுக்கு அறிவுரை - Leopard Movement In Mayiladuthurai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 2:44 PM IST

Updated : Apr 4, 2024, 5:46 PM IST

வனப்பாதுகாவலர் விளக்கம்
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்

Leopard Movement In Mayiladuthurai: மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் முகாமிட்டிருந்த சிறுத்தை 3 கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி உள்ளதாக கண்டறியப்பபட்டுள்ளது. பொதுவாகவே சிறுத்தை மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லும் என்பதால் அச்சப்பட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பதுங்கியிருக்கும் சிறுத்தை, வலை விரிக்கும் வனத்துறை!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (ஏப்.02) இரவு சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீஸ் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் சிறுத்தையின் கால் தடம் மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி ஏதுமில்லாத மயிலாடுதுறைக்கு சிறுத்தை வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த பகுதியில் சிறுத்தை போன்ற விலங்குகள் சமீபத்தில் வந்ததே இல்லை என்பதையும் பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர். இதனையடுத்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருந்தனர்.

மேலும் சிறுத்தை தென்பட்டால் 9360889724 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தினர். இதனையடுத்து, சிறுத்தை எங்கு பதுங்கி உள்ளது என்று கண்டறியப்படாததால் மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 7 பள்ளிகளுக்கு இன்றும் (ஏப்ரல் 4) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் 4 பள்ளிகளுக்கு வனத்துறை தீயணைப்பு துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் முகாமிட்டிருந்த சிறுத்தை, அப்பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நகர்ந்து, ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதுங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில், வனத்துறையினர் முகாமிட்டுட்டுள்ளனர். மேலும், சிறுத்தையின் கால் தடம் கண்டுபிடிக்கப்பட்டு மார்க் செய்யப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுத்தை பதுங்கி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில் திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் ஆகியோர் சிறுத்தையின் கால் தடத்தை வைத்தும், சாட்டிலைட் புகைப்படம் மற்றும் கூகுள் மேப் கொண்டும் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ் கூறுகையில், “சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை துறை மருத்துவர்கள் இப்பகுதிகளில் இருக்கின்றனர். சிறுத்தையை கண்காணிக்க ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 10 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மேலும், இதுகுறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். இந்த வகையான சிறுத்தை மனிதர்களுக்கு அச்சுறுத்தல் தராது. மனிதர்களை பார்த்தால் அது விலகிச்செல்ல முயற்சி செய்யும். இப்பகுதிகளில் 1990 காலகட்டங்களில் சிறுத்தை காரைக்கால் பகுதிக்கு வந்துள்ளது. அதன் பின்னர், தற்போது மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்படுகிறது.

சிறுத்தைக்கு ஏற்படும் இடையூறுகளைப் பொறுத்து அதன் வேகம் அதிகரிக்கும். சிறுத்தையின் கால் தடத்தை வைத்து பார்த்ததில், அதற்கு ஏழிலிருந்து எட்டு வயது வரை இருக்க வாய்ப்புள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 5 சிறப்பு அதிகாரிகள் வருகை தர உள்ளனர். சிறுத்தையை பிடிக்க இரண்டு கூண்டுகள் மதுரையிலிருந்து வந்து கொண்டிருக்கிறது.

இரவில் சிறுத்தைகளை கண்காணிப்பதற்கு தெர்மல் ட்ரோன் கேட்கப்பட்டுள்ளது. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அதன் நடமாட்டம் இருக்காது. இரவு நேரத்தில் நடமாட்டம் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். விரைவில் சிறுத்தையை பிடித்து விடுவோம். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவில் வெளியில் படுத்து உறங்குவதை தவிர்க்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் நா.த.க-வுக்கு கிடைக்காத விவசாயி சின்னம் சுயேச்சைகளுக்கு கிடைத்தது எப்படி? - தேர்தல் ஆணையம் விளக்கம்! - FARMER SYMBOL

Last Updated :Apr 4, 2024, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.