ETV Bharat / state

அயோத்தி ராமரை கொச்சைப்படுத்தும் விதமாக திமுக நிர்வாகி கருத்து பதிவிட்டதாக பாஜகவினர் புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 21, 2024, 12:35 PM IST

பாஜகவினர் புகார் மனு
பாஜகவினர் புகார் மனு

DMK Ramya Begum: அயோத்தியில் ஸ்ரீராமருக்கு அளிக்கப்படும் ஓய்வு நேரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக முகநூலில் பதிவிட்டதாக திமுக மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

திருச்சி: திருச்சி திமுக மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரம்யா பேகம், அயோத்தி ராமரை கொச்சைப்படுத்தும் விதமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளதாக மணப்பாறை காவல் ஆய்வாளரிடம் மணப்பாறை பாஜக வடக்கு மண்டல தலைவர் சதீஷ்குமார், தனது கட்சி நிர்வாகிகளோடு சேர்ந்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பாஜகவினர் அளித்த புகார் மனு
பாஜகவினர் அளித்த புகார் மனு

அதில், "கடந்த 18ஆம் தேதி திருச்சி திமுக மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளரும், தலைமைக் கழக பேச்சாளருமான ரம்யா பேகம் என்ற பெண், அயோத்தியில் ராமருக்கு அளிக்கப்படும் ஓய்வு நேரம் குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த, “அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு! ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை, காலை 4 மணிக்கு தூக்கத்தில் எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டிருக்க முடியாது.

அதனால் ராமர் கோயில் கதவை மதியம் 12.30 - 1.30 வரை மூடி உள்ளோம். அப்போது தான் அவரால் ஓய்வு எடுக்க முடியும்” என்ற பதிவிற்கு, “புள்ள உச்சா போகணும்னா என்னடா பண்ணனும். டைபர் மாற்றி விட்டு இருக்கீங்களா?, இல்லையா? என்று கேலி செய்து பதிவிட்டுள்ளார்.

அதை பார்த்த எனக்கும், எனது நண்பர்களுக்கும் மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டது. உலகமே வணங்கும் தெய்வம் ராமர் பற்றி சமூக வலைத்தளமான முகநூலில் பதிவிட்டு ராமரை அவமானப்படுத்தியும், மத உணர்வை கெடுக்கும் விதத்திலும், மதக் கலவரத்தை தூண்டும் வண்ணமாக பதிவிட்டுள்ள ரம்யா பேகம் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு உள்ளார்.

அயோத்தியில் குழந்தை ராமரின் சிலை கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதியன்று வெகு விமரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், அயோத்தி ராமர் கோயில் குறித்து பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேனியில் நீதிமன்ற விசாரணைக்கு வந்த கைதி தப்பி ஓட்டம்; மடக்கிப் பிடித்த போலீசார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.