ETV Bharat / state

ரூ.500-க்காக பழங்குடி பெண் மீது பொய்வழக்கு? - கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார்.. தென்காசியில் நடந்தது என்ன? - tenkasi tribal woman false case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 7:37 PM IST

பழங்குடியின பெண் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார்
பழங்குடியின பெண் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

tenkasi tribal woman false case: தென்காசியில் பழங்குடியின பெண் ஒருவர் தான் உட்பட 3 பெண்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீதும், உதவி ஆய்வாளர் மனைவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பழங்குடியின பெண் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

தென்காசி: சுரண்டை பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், "கடந்த 12ஆம் தேதியன்று சுரண்டையிலிருந்து கடையம் பகுதிக்கு பழைய துணிகளை வாங்குவதற்காக நானும், எனது அக்கா மற்றும் எனது உறவினர் பெண் ஒருவர் ஆகிய மூன்று பேரும் தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம்.

அப்போது, பேருந்து இருக்கையில் ஒரு பெண் அமர்ந்த நிலையில் அந்த பெண்ணின் அருகாமையில் எனது உறவினர் பெண்ணும் அதே இருக்கையில் அமர்ந்தார். அப்போது அந்த இருக்கையில் இருந்த சேந்தமரம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் என்பவரின் மனைவியான பால்தாய் என்பவர், தங்களை வேறு இருக்கையில் அமருமாறு கூறிய நிலையில், அதற்கு தாங்களும் மனிதர்கள் தான், நாங்களும் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணம் செய்கிறோம் எனக் கூறிய நிலையில், கோபம் அடைந்த பால்தாய் அடுத்த பேருந்து நிலையத்தில் இறங்கிச் சென்றார்.

இந்நிலையில், சில கிலோமீட்டர் தூரம் சென்ற பேருந்தை திடீரென இரண்டு போலீசாருடன் வந்து மறித்து தன்னுடைய பர்சை காணவில்லை என பால்தாய் கூறினார். உடனே பேருந்து நடத்துநர் கீழ் கிடந்த பர்ஸை எடுத்து பால்தாயிடம் கொடுத்த நிலையில், அந்த பர்சில் சில நூறு ரூபாய் வைத்து பால்தாய் நடத்துநரிடம் கொடுத்தார். தொடர்ந்து, எனது உறவினர் பெண் மற்றும் எனது அக்கா உட்பட எங்கள் மூவரையும் போலீசார் கடையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் எங்களை நீண்ட நேரம் காக்க வைத்து எனது அக்கா மற்றும் உறவினர் பெண் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தாங்கள் எந்த விதமான தவறும் செய்யாமலேயே எங்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்த கடையம் காவல்துறையினர் மீதும், எங்கள் மீது பொய் வழக்கு கொடுத்த உதவி ஆய்வாளரான ஜெயராஜின் மனைவி பால்தாய் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எந்தவிதமான தவறும் செய்யாத எனது அக்கா மற்றும் உறவினர் பெண் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்! - SANKARANKOVIL Therottam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.