ETV Bharat / state

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகத் தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 4:38 PM IST

Thanjavur Farmers Train strike
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

Thanjavur Train strike: நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். எம். எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூர் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்: மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். எம். எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கோரும், மத்திய அரசின் மின்சார வாரிய ஒழுங்குமுறை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

வேளாண் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 13ஆம் தேதி முதல் டெல்லியை நோக்கி லட்சக்கணக்கான டிராக்டர்களில் செல்ல முயல்கின்றனர். இதனால் தலைநகர் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, பாதுகாப்புப் படையினர் விவசாயிகள் மீது, தண்ணீர் பாய்ச்சி, கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி, ரப்பர் குண்டுகளால் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாகத் தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்குத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர்.

பின்னர், ரயில் நிலையத்தில் நுழைய முயன்ற விவசாயிகளை,போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால், விவசாயிகள் தடுப்புகளை அகற்றிக் கொண்டு உள்ளே நுழைந்து, திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சோழன் விரைவு சோழன் விரைவு ரயிலை மறித்தனர். பின்னர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துக் கண்டன கோஷம் எழுப்பினர். சுமார் 5 நிமிட போராட்டத்துக்குப் பிறகு அதில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: எந்த வகை பஞ்சு மிட்டாய்களுக்கு தடை? - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.