ETV Bharat / state

வாகனத் தணிக்கையின் போது இளைஞரைக் காலால் எட்டி உதைத்த வீடியோ வைரல்.. 3 காவலர்கள் சஸ்பெண்ட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 5:26 PM IST

வாகன தணிக்கையின் போது இளைஞரை காலால் எட்டி உதைத்த காவலர்கள்
வாகன தணிக்கையின் போது இளைஞரை காலால் எட்டி உதைத்த காவலர்கள்

Traffic policemen suspended for kicking youth: சென்னையில் வாகனத் தணிக்கையின் போது, இளைஞரைக் காலால் எட்டி உதைத்து, அடித்த போக்குவரத்து காவலர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

சென்னை: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மெட்டுக்குப்பம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி இரவு கோயம்பேடு போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஹேமநாத் (வயது 27) என்பவரை மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை செய்துள்ளனர்.

ஹேமநாத் மது போதையில் வாகனம் ஓட்டி வந்ததாகவும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும் கூறி அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமநாத் அங்குப் பணியில் இருந்த கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் சக்திவேல் மற்றும் போக்குவரத்து காவலர்கள் தினேஷ், அருள், சூரிய நாராயணன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, போக்குவரத்து காவலர் தினேஷ், ஹேம்நாத்தை அடித்து கீழே தள்ளி, தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்து உள்ளார். மேலும், அவரது இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து கோயம்பேடு போக்குவரத்து காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த ஹேமநாத்தின் பெற்றோர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின், போலீசார் ஹேமநாத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், காயமடைந்த ஹேமநாத் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் சம்பவம் குறித்து ஹேமநாத் போக்குவரத்து உயர் காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததின் அடிப்படையில், வடக்கு மண்டலப் போக்குவரத்து இணை ஆணையர் தேவராணி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் இருசக்கர வாகன ஓட்டுநரைப் போக்குவரத்து காவலர் பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு போக்குவரத்து உதவியாளர் சக்திவேல், போக்குவரத்து காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இரு சக்கர வாகன ஓட்டியை, போக்குவரத்து காவல்துறையினர் பூட்ஸ் கால் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக தென்காசி மாவட்டத்தில் போலீசார் இளைஞரைத் தாக்கிய வீடியோ இணையத்தில் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இளைஞரைத் தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதையும் படிங்க: திருவிடைமருதூர் அருகே திடீரென இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடம்.. 6 மாதமாக மரத்தடியில் இயங்கும் தொடக்கப்பள்ளி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.