ETV Bharat / state

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - School reopen date

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 2:44 PM IST

TN School Reopen date: 2024 - 2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு கோடை விடுமுறைக்குப் பின் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவிகள்
அரசுப் பள்ளி மாணவிகள் (Credits - ETV Bharat Tami Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் 2023 - 24ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களுக்கான கோடை விடுமுறையானது, வெயிலின் தாக்கம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிக்கை
பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், 2024 - 25ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்கும் பணிகள் மார்ச் 1ஆம் தேதி முதல் துவங்கியது. மாணவர்களுக்கு பள்ளி திறந்த அன்றே பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கிய உடன் பெற்றோரின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் (SMS) அனுப்பும் முறையும் முதல்முறையாக செய்யப்பட உள்ளது.

மாணவர்களின் செயல்பாடுகளையும், பள்ளிக்கல்வித்துறையின் திட்டங்களையும் பெற்றோருக்கு தெரிவிக்க வாட்ஸ்அப் (Whatsapp) மூலமும் அறிவுறுத்தப்பட உள்ளது. அதன் மூலம் அனைத்து பெற்றோருக்கும் மாணவர்களின் செயல்பாடுகள் தெரியும். பள்ளிகளை திறப்பதற்கு முன்னர் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்திருக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது. அதன் பின்னர், ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்த பின்னர் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2024 - 2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜுன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்திடவும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இறுதி பேட்டிக்கான யுத்தத்தில் வெல்ல போவது யார்? ஹைதராபாத்-ராஜஸ்தான் அணிகள் இன்று சென்னையில் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.