ETV Bharat / sports

இறுதி பேட்டிக்கான யுத்தத்தில் வெல்ல போவது யார்? ஹைதராபாத்-ராஜஸ்தான் அணிகள் இன்று சென்னையில் மோதல்! - SRH Vs RR qualifier 2

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 11:44 AM IST

SRH vs RR, Qualifier 2 IPL 2024: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இரு அணி வீரர்கள்(கோப்புப்படம்)
இரு அணி வீரர்கள்(கோப்புப்படம்) (Credit - IANS)

சென்னை: கடந்த மார்ச் மாதம் தொடங்கிய 17வது ஐபிஎல் தொடரில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விறுவிறுப்பாகவும், பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவும் நடைபெற்ற இந்த தொடரில் கோப்பை வெல்லப்போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு குவாலிபையர் 2 போட்டி நடைபெறவுள்ளது. இதில் குவாலிபையர் 1ல் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணியும் எலிமினேட்டர் சுற்றில் மாஸாக வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தும். இவ்விரு அணிகளும் இந்த சீசனில் ஒரு முறை மோதியுள்ளன இதில் 1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல்: ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்தில் அட்டகாசமாக விளையாடியது, இருப்பினும் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்தது.

அந்த அணியின் பலமாகப் பார்க்கப்படுவது பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சமபலத்துடன் இருப்பதுதான். காரணம் வேகப்பந்து பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், சந்தீப் சர்மா ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதே போல் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், சஹால் ஆகியோர் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்துவது மட்டும் அல்லாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர். பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், ரியான் பராக், கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அதே போல் ஹெட்மையர், ரோவ்மேன் பவல் ஆகியோர் பினிசிங் ரோலில் அற்புதமாக விளையாடி வருகின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ஆனால் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை வெல்வது அவ்வளவு எளிதல்ல. காரணம் கடப்பாரை பேட்டிங் லைன் அப்பை கொண்டுள்ள ஹைதராபாத் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான அபிசேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் நங்கூரமிட்டு விட்டார்கள் என்றால் அந்த அணியின் ஸ்கோர் 200+ தாண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

  • '

இதனால் ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் இந்த பார்ட்னர்ஷிப் சீக்கிரமாக வீழ்த்த வேண்டும். அதே போல் ஹைதராபாத் அணி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடந்த சில போட்டிகளாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவதில் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

இதனால் இந்த போட்டியில் அஸ்வின் மற்றும் சாஹல் ஆகியோர் எப்படி செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அந்த அணியின் பந்து வீச்சை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், புவனேஸ்வர் குமார், பேட் கம்மின்ஸ் ஆகியோர் கலக்கி வருகின்றனர்.

இரு அணிகளும் சமபலத்துடன் காணப்படுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. குவாலிபையர் 2ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் அந்த அணி யார் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இதையும் படிங்க: ஆர்சிபி மீது வன்மத்தைக் கக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்.. மீம்ஸ் மழையால் நனைந்த சோஷியல் மீடியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.