ETV Bharat / state

"மேட்டூர் அணையைத் திறக்க வலியுறுத்தி போராட்டம்" - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 27, 2024, 10:19 PM IST

tn-farmers-association-
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

TN Farmers Association: மேட்டூர் அணையைத் திறக்க வலியுறுத்தி வரும் ஜன.30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் போராட்டம் நடத்தவுள்ளதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

பி.எஸ்.மாசிலாமணி பேட்டி

திருவாரூர்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் அளவிலான விரிவடைந்த கூட்டம் இன்று (ஜனவரி 27) காலை நடைபெற்றது. இதில், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரைக் கர்நாடகா அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறியதாவது, “கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை, ஒரு சில பகுதிகளுக்குப் பாதிப்பையும் ஒரு சில பகுதிகளுக்கு நன்மையையும் ஏற்படுத்தியது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. ஆனால் தற்போதுவரை எந்த கணக்கெடுப்பையும் நடத்தவில்லை.

இந்த நிலையில், சம்பா பயிர்கள் அறுவடை தருணத்திலும், தாளடி பயிர்கள் கதிர்கள் முற்றும் தறுவாயிலும் உள்ளன. இந்த பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய சூழல் உள்ளது. தண்ணீர் பாய்ச்சவில்லையெனில் அந்தப் பயிர்கள் முற்றிலும் பதராகிவிடும்.

ஜனவரி 28ஆம் தேதி முதல் குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணை மூடப்படும் என்ற நியதி இருந்தாலும். இதுவரை குறுவை சாகுபடிக்கான தண்ணீர் உரிய அளவு திறந்துவிடப்படவில்லை. இதனால் பிப்ரவரி 15ம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மேட்டூர் அணையைத் திறந்து விட்டு பயிர்களைக் காப்பாற்ற வேண்டும்.

தமிழக அரசு குடிநீர்த் தேவைக்காக மேட்டூர் அணையில் தண்ணீரைத் தக்க வைத்துக்கொள்ள நினைக்கலாம். ஆனால், டெல்டா மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளை நிரப்பவும்,கால்நடைகளுக்கும் தேவையான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும் மேட்டூர் அணையை உடனடியாக திறக்க வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு 71 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.ஆனால் 7 டிஎம்சி தண்ணீர் கூட திறக்க மறுக்கின்றன. எனவே தமிழக அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அணுகி தமிழகத்துக்கான தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டும்.

மேலும், மேட்டூர் அணையை உடனடியாக திறந்து பயிர்களைப் பாதுகாத்திட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் ஜன.30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்தவுள்ளோம்.

இதில், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் தண்ணீர் தேவைப்படுகின்ற வட்டாரங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதோடு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திருச்சியில் ரூ.10க்கு விற்பனையான சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம்: விவசாயிகள் வேதனை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.