சென்னை: நாடு முழுவதும் 543 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “வேட்புமனுத் தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை சமர்ப்பிக்கப்படும் புதிய வாக்காளர் பெயர்களை சேர்ப்பதற்கான படிவங்கள் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு பரிசீலிக்கப்படும். அதற்குப்பின் வரும் படிவங்கள் பெற்றுக் கொள்ளப்படும், ஆனால் பரிசீலிக்க நேரம் இருக்காது.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் வாக்குகள் சேகரிக்கக் கூடாது. விழாக்கள் நடத்தலாம், பிரச்சாரம் செய்யக் கூடாது. அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளலாம். இப்தார் நோன்பு திறக்கும் போது தலைவர்கள் கலந்து கொள்ளலாம். ஆனால், வாக்கு சேகரிக்கக் கூடாது. சமூக வலைத்தளப் பதிவுகள் குறித்து அரசியல் கட்சிகள் புகார் அளித்தால், அதற்கான சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் படிவம் 12-ஐ பூர்த்தி செய்து கொடுத்தால், வீட்டிலிருந்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கிராம நிர்வாக அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பணிகளை மேற்கொள்வார்கள். 100 சதவீத வாக்குச் சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் செல்லத் தேவையான வசதிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுத்தவரை, துணை ராணுவப் படையினர், மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில காவல்துறையினர் என இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகள்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
வங்கி பணப் பரிவர்த்தனைகள் குறித்து கண்காணிப்பு அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படும்.
வாக்குச்சாவடிகள் மாற்ற வேண்டிய நிலை வந்தால் மாற்றுவோம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறைகள் இருந்தால், அது சரி செய்யப்பட்டு வருகிறது.
புதிய அரசாணைகள் வெளியிடக்கூடாது. புதிய திட்டங்கள் செயல்படுத்தக்கூடாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும். மற்ற ஆவணங்கள் வைத்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை (மார்ச் 19) மாலை 3 மணிக்கு அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடைபெற உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 7 கட்டங்களாக நடக்கிறது நாடாளுமன்ற தேர்தல்.. தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு எப்போது?