ETV Bharat / state

பல பிரச்சினைகளால் நலிவடைந்து வரும் பின்னலாடை தொழில் - திருப்பூரை காக்க நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 8:01 PM IST

Updated : Jan 30, 2024, 9:40 PM IST

tiruppur knittung industries
பல பிரச்சனைகளால் நலிவடைந்து வரும் பின்னலாடை தொழில்

Tiruppur industrialists demand: மூலப்பொருள் விலை ஏற்ற இறக்கம், வங்கதேச ஆடைகள் இறக்குமதி, ஏற்றுமதி சரிவு என கடந்த ஆண்டு பல இடர்பாடுகளை சந்தித்த பின்னலாடை துறைக்கு தனி வாரியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

நலிவடையும் திருப்பூர் பின்னலாடை தொழில்

திருப்பூர்: திருப்பூர் என்றதும் பனியன் ஆடைகள் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு திருப்பூர் ஆடைகள் உலக அளவில் பிரசித்தம் பெற்று விளங்குகிறது. திருப்பூரில் வேளாண் தொழில் மட்டுமே பிரதானமாக விளங்கி வந்த நிலையில், இங்கு அபரிமிதமாக உற்பத்தியான பருத்தி அதனைச் சார்ந்து அமைந்த ஜின்னிங் மில் மற்றும் நூற்பாலைகள் சீதோஷ்ண நிலை காரணமாக பனியன் தொழில் மற்ற பகுதிகளை விட சிறப்பாக அமைந்தது.

தொடர் முயற்சியின் காரணமாக திருப்பூர் தற்போது இந்தியாவின் டாலர் சிட்டியாக (dollar city of india) விளங்கி வருகிறது. ஏற்றுமதியில் ஆண்டுக்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணியை ஈட்டி தரும் நகராகவும், உள்நாட்டு பனியன் தேவையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறும் பகுதியாகவும் திருப்பூர் திகழ்ந்து வருகிறது. தொழில் வளர்ச்சியடைய தொழிலாளர்கள் தேவை அதிகரித்து, இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த மக்களும் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

மேலும் இந்தியாவின் வட மாநிலங்களைச் சேர்ந்த பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் போன்ற பல்வேறு வட மாநில தொழிலாளர்களும் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த பனியன் துறையை நம்பி கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஓராண்டாக பருத்தி மற்றும் நூல் விலை நிலைத்தன்மை இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன், ஏற்றுமதியாளர்களையும், பனியன் உற்பத்தியாளர்களையும் கலக்கமடைய செய்துள்ளது. பனியன் ஆர்டர்கள் வரும் சமயங்களில் எல்லாம் நூல் விலை உச்சத்தை தொடுவதும், ஆர்டர்கள் இல்லாத போது வீழ்ச்சியடைவதும் என பின்னலாடை துறையை நசிவடைய செய்துள்ளது.

இதனால் பல நிறுவனங்கள் திருப்பூரின் தொன்மையான காட்டன் ஆடைகளை விடுத்து செயற்கை இழையான பாலியஸ்டர் மூலம் ஆடை தயாரிக்க துவங்கி விட்டனர். மேலும் உலகளாவிய மந்த நிலை காரணமாக அமெரிக்கா ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் மக்களின் வாங்கும் திறன் குறைந்து ஏற்றுமதி ஆர்டர்களும் பெருமளவு குறைந்து உள்ளது.

இதனால் கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கோடி அளவிலான ஆர்டர்களை இந்தியா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் திருப்பூரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய உள்நாட்டு சந்தை குறித்து நன்கு தெரிந்து கொண்ட வங்கதேசம் வரி சலுகை காரணமாக ஆடைகளை குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து கடும் போட்டி மற்றும் நெருக்கடியை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதனால் 70 சதவிகித சிறு குரு மற்றும் நடுத்தர பனியன் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கார்பரேட் அளவிலான நிறுவனங்கள் அரசுக்கு தவறான தகவல்களை கொடுத்து அவர்களுக்கு ஏதுவான திட்டங்களை செயல்படுத்த வைப்பதாகவும், இதனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

கோரிக்கைகள்: தற்போது தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 700 கார்ப்பரேட் அளவிலான நிறுவனங்கள் மட்டுமே உள்ளது. அதில் சுமார் 10 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில்துறையினர் உள்ளனர். இந்த நிறுவனங்கள் மூலமாகவே வேலை வாய்ப்பு பெருகி வருகிறது. அரசு இதனை கருத்தில் கொண்டு சிறுகுறு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் தனி வாரியம் அமைத்து, அதில் தொழில் துறையினரையும் சேர்த்து சிறு நிறுவனங்களுக்கான நலத்திட்டங்களை வகுக்க வேண்டும்.

பருத்தியை அரசே கொள்முதல் செய்து விலையை கட்டுப்படுத்த வேண்டும். வங்கதேச ஆடைகள் இறக்குமதிக்கு வரி விதித்து கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பனியன் தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடு கட்டி தர வேண்டும். குடிசை தொழில் போல வீடுகளில் தையல் இயந்திரம் வைத்து பனியன் தயாரிக்கும் இடங்களிலும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப் போன்ற சலுகைகள் கிடைக்காத நிலையில் அவர்களுக்கு அரசு சார்பில் மருத்துவ காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் திருப்பூரில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான, கல்வி உதவி தொகை வழங்க மத்திய அரசு அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை திருப்பூரில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: "நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மரண அடி தரவேண்டும்" - ஈபிஎஸ்

Last Updated :Jan 30, 2024, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.