ETV Bharat / state

சிக்கலில் நாம் தமிழர் கட்சி சின்னம்? கரும்பு விவசாயியை காட்டி வாக்கு சேகரிப்பில் நெல்லை வேட்பாளர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 4:01 PM IST

கரும்பை காட்டி வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் வேட்பாளர்
கரும்பை காட்டி வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் வேட்பாளர்

Naam Tamilar Katchi: நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் சின்னம் உறுதியாகாத நிலையில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா, கரும்பு விவசாயி சின்னத்தை காட்டி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரும்பை காட்டி வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் வேட்பாளர்

திருநெல்வேலி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர்தலுக்கான தேதி இம்மாதம் அறிவிக்கப்படும் என்று நிலையில், அரசியல் கட்சியினர் ஒருபுறம் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு என பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக என தேர்தல் களத்தில் பல கட்சிகள் இருந்தாலும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே, நாம் தமிழர் கட்சி முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பட்டியலை வெளியிட்டது மட்டுமல்லாமல், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா, தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நேற்று (மார்ச் 1) அவர் வள்ளியூர் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்பகுதியில் உள்ள கடைகள், பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று, பொதுமக்களிடம் தனக்கு ஓட்டு போடும்படி வாக்கு சேகரித்தார். கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.

இந்த தேர்தலிலும், அதே சின்னத்தை அக்கட்சி கோரிய நிலையில், கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் நாம் தமிழர் கட்சிக்கு சிக்கல் நீடித்து வருகிறது. ஏனெனில், ஏற்கனவே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கு வழங்கப்பட்டிருப்பதால், நாம் தமிழர் கட்சியினருக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக நாம் தமிழர் கட்சி இருப்பதால், இந்த முறை தேர்தல் சின்னத்தை மாற்றி விடுங்களேன் என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கூறியது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அதே சமயம் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, நாம் தமிழர் வேட்பாளர்கள் களத்தில் கரும்பு விவசாயி சின்னத்தை காட்டியே வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரச்சாரத்தில் ஈடுபட்ட நெல்லை தொகுதி வேட்பாளர் சத்யாவும், கரும்பு சின்னத்தை கையில் ஏந்தியபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, நாம் தமிழர் வேட்பாளர் சத்யாவை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்டபோது, “நாங்கள் ஏற்கனவே கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டுள்ளோம். இந்த முறையும் அச்சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடி வருகிறோம்.

கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் பொதுமக்களிடம் இந்த சின்னத்தைக் காட்டி வாக்கு சேகரித்து வருகிறோம்” என தெரிவித்தார். தமிழக அரசியல் களத்தில் வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து பிரச்சாரத்திலும் நாம் தமிழர் கட்சி முதல் ஆளாக களம் இறங்கி இருப்பது அரசியல் களத்தில் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் 2024; தொகுதிப் பங்கீடு குறித்து திமுக - மனித நேய மக்கள் கட்சி நாளை பேச்சுவார்த்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.