ETV Bharat / state

தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பெண்ணை அடித்துக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 5:22 PM IST

tirunelveli-district-women-court-has-ordered-life-imprisonment-for-the-man-who-beat-the-woman-to-death
பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு: பெண்ணை அடித்துக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை..

Tirunelveli District Women's Court: பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் ராயப்பன். இவருடைய மனைவி அந்தோணி வியாகம்மாள் (54). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாத்திமாராஜ் (48) என்பவருக்கும் தெரு பொதுக் குழாயில் குடிதண்ணீர் பிடிப்பதில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று, அந்தோணி வியாகம்மாள் தெரு பொதுக்குழாயில் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பாத்திமாராஜ், அவரை பார்த்து நீ எப்படி எனக்கு முன்னாடி தண்ணீர் பிடிப்பாய் என்று கூறி தகராறு செய்ததோடு, தான் வைத்திருந்த கட்டையால் அந்தோணி வியாகம்மாளை சரமாரியாகத் தாக்கி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து சேர்ந்தமரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பாத்திமாராஜை கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்த வழக்கில், அரசு வழக்கறிஞராக ஜெய பிரபா ஆஜராகி, அரசுத் தரப்பு விளக்கங்களை வழங்கினார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட பாத்திமா ராஜ்-க்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவல்துறை விசாரணைக்கு தயார்.. ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீண்டும் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.