ETV Bharat / state

நெல்லை காங்கிரஸ் ஜெயக்குமார் மர்ம மரணம்: விசாரணை வளையத்தில் சிக்கிய அரசியல் புள்ளிகள்! - Tirunelveli Jayakumar Death

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 6, 2024, 1:43 PM IST

Tirunelveli Jayakumar Death: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய, அவை தடய அறிவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள நபர்களிடம் விசாரணை தொடங்க உள்ளதாகவும் திருநெல்வேலி சரக காவல் துறைத் துணைத் தலைவர் மூர்த்தி (DIG) தெரிவித்துள்ளார்.

Photo of Jayakumar and Nellai DIG Murthy
ஜெயக்குமார், நெல்லை டிஐஜி மூர்த்தி (Image Credits- Etv bharat Tamil nadu)

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை காணவில்லை என அவரது மகன் கருத்தையா ஜாப்ரின் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (மே 4) கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள ஜெயக்குமாருக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயக்குமாரின் இறுதி நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஜெயக்குமாரின் மர்ம மரணம் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் இறப்பதற்கு முன் கடந்த 30ஆம் தேதி அவர் எழுதியதாக கருதப்படும் மரண வாக்குமூலம் ஒன்று கைப்பற்றப்பட்டது.

அதில், 'தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களால் தனக்கு கொலை மிரட்டல் வருகிறது; அவர்கள் தன்னிடம் பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மேலும் இரண்டு கடிதங்களில் இடம்பெற்றிருந்த தகவல்கள் நேற்று வெளியாகி இருந்தன.

தனது மருமகன் ஜெபாவிற்கு கடந்த 27ஆம் தேதி ஜெயக்குமார் எழுதியதாக சொல்லப்படும் ஒரு கடிதத்தில், யார் யாரிடம் எவ்வளவு பணம் வாங்க வேண்டும்?, யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளேன்? என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த 30ஆம் தேதி தனது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மற்றொரு கடிதத்தில், தமது குடும்பத்தில் உள்ள நபர்கள் யாரையும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயக்குமாின் மரணம் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவிழாத மர்ம முடிச்சு

அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்னும் அவிழாத சூழலில், அவர் எழுதியதாக கூறப்படும் மரண வாக்கு மூலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால், இது அரசியல் சார்ந்த கொலையா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

அதேசமயம், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்த கொலை என்றால், இவ்வளவு சாதாரணமாக ஜெயக்குமாரின் வீட்டு அருகில் உள்ள தோட்டத்தில் வைத்து கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று பேசப்படுகிறது. ஒருவேளை எரித்து கொல்லப்பட்டிருந்தால் குற்றவாளிகள் பெரும்பாலும் அடையாளம் தெரியாத அளவுக்கு உடலை முழுமையாக எரித்து சாம்பலாக்கியிருக்கக்கூடும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் பாதி உடல் மட்டுமே எரிந்து கிடந்த நிலையில், மறுபுறம் அவரது உடல் பலகையில் இரும்பு கம்பியால் கட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஜெயக்குமார் தற்கொலை செய்திருந்தால் உடம்பை ஏன் அவரே கட்டியிருக்க வேண்டும்? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் மரண வாக்குமூல கடிதம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படவில்லை. அக்கடிதமும், பிற கடிதங்களும் அவரது அறையில் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. எனவே இந்த கடிதங்கள் உண்மையாகவே ஜெயக்குமார் கையால் சுயநினைவோடு அவரால் எழுதப்பட்டதா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் சிக்கிய அரசியல் புள்ளிகள்

இந்த சம்பவம் குறித்து திருநெல்வேலி சரக காவல் துறைத் துணைத் தலைவர் (பொறுப்பு) மூர்த்தியை, ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் சார்பில் தொடர்பு கொண்டபோது, “ஜெயக்குமார் எழுதிய கடிதங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய, அவற்றை தடய அறிவியல் துறைக்கு அனுப்பியுள்ளோம். தனிப்படை போலீசாரும் தீவிரமாக விசாரணையை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் விசாரணை தொடங்கப்பட உள்ளது. கடிதத்தில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து நபர்களுக்கும் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறோம்” என்று மூர்த்தி கூறினார்.

இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு இந்த வழக்கின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கும் போலீசார் சம்மன் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் உவரி காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என தெரிகிறது.

இதையும் படிங்க: நெல்லை காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உடல் நல்லடக்கம்! தலைவர்கள் மரியாதை - JAYAKUMAR FINAL RITES

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.