ETV Bharat / state

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா; ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 2:56 PM IST

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்

மதுரை: உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான தெப்பத் திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமியும், அம்மனும் அன்ன வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

இந்நிலையில் தெப்பத் திருவிழாவையொட்டி கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனுக்கும் எழுந்தருளிட பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று மாலையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனைதொடர்ந்து முக்தீசுவரர் கோயிலில் எழுந்தருளும் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெறுகிறது.

விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் மீனாட்சி அம்மனையும், சுந்தரேஸ்வரரையும் தரிசனம் செய்தனர். தெப்பகுளத்தில் நீர் நிரம்பி இருப்பதால் காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

இதையும் படிங்க: மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு: 10 காளைகளை அடக்கிய அபி சித்தர் முதல் இடம் பிடித்து மஹிந்திரா கார் பரிசை வென்றார்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.