ETV Bharat / state

வெள்ளத்தால் பழுதடைந்த தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளும் சரிசெய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி துவக்கம்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 19, 2024, 11:40 PM IST

thoothukudi-thermal-power-station-5-units-have-broken-down-they-have-been-repaired-and-production-has-resumed
தூத்துக்குடி அனல்மின் நிலையம்; வெள்ளத்தால் பழுதடைந்த 5 அலகுகளும் சரிசெய்யப்பட்டு மீண்டும் உற்பத்தி துவக்கம்..!

Tuticorin Power Station: கடந்த டிசம்பர் 16, 17 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளும் பழுதடைந்த நிலையில், தற்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தியானது தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, பாதுகாப்பு கருதி அனல்மின் நிலையத்தில் செயல்பாட்டில் இருந்த அலகுகள் டிசம்பர் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நிறுத்தப்பட்டது.

அனல் மின் நிலையம் கடல் மட்டத்திற்குக் கீழே இருப்பதால் வெள்ள நீரை வெளியேற்றுவது மிகச் சவாலான பணியாக இருந்தது. ஆய்வில் அனல் மின் நிலையத்தின் நிலக்கரி கையாளும் பகுதிகள், சுவிட்ச்யார்டு, எரி எண்ணெய் கையாளும் பகுதி, கடலிலிருந்து குளிர்வு நீர் கொண்டுவரும் பாதைகள் மற்றும் வேதியியல் தொழில்நுட்ப பகுதி ஆகிய அனைத்தும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

அனல்மின் நிலையம் மட்டுமல்லாது, அனல் மின் நிலைய குடியிருப்புகள் முகாம் 1 மற்றும் 2 ஆகியவை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. தரைதள வீடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு, மின்சாரம், குடிநீர் ஆகியவையும் துண்டிக்கப்பட்டது.

ஆனால், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது சொந்த இன்னல்களை மறந்து, அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தியைத் துவக்குவதற்காகக் களத்தில் இறங்கினர். இதையடுத்து நிதி, மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் மின்சாரம் அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்வாரிய மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் டிசம்பர் 21ஆம் தேதி அன்று அனல்மின் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார்கள்.

குளிர்வு நீர் பாதைகள் நான்கு மீட்டருக்கும் அதிகமான ஆழம் கொண்டது என்பதால், நிலத்திலிருந்து வருகின்ற ஊற்று நீரை வெளியேற்றுவது சவாலான பணியாக இருந்தது. பல்வேறு நிலை பொறியாளர்கள் தலைமையில், பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் அலகு 4 மற்றும் 5ல் பணிகள் முடிக்கப்பட்டு மீண்டும் 12 நாட்களிலேயே டிசம்பர் 31ஆம் தேதி அன்று வெற்றிகரமாக மின் உற்பத்தி துவக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகக் குளிர்வு நீர் பாதை 1ல் உள்ள சாம்பல் கழிவை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. தனித்தனியாகப் பொறியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொய்வின்றி தொடர்ந்த சீரமைப்பு பணிகள் காரணமாக அலகு 1 மற்றும் 3 ஆகியவற்றில் ஜனவரி 10ஆம் தேதி அன்றே 22 நாட்களில் மீண்டும் வெற்றிகரமாக மின் உற்பத்தி துவக்கப்பட்டது.

குளிர்வு நீர் பாதை அலகு 2-ன் சுரங்க பகுதி கூடுதல் சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தது. அதைச் சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று ஜனவரி 16ஆம் தேதி அன்று மீண்டும் 28 நாட்களில் மின் உற்பத்தி துவக்கப்பட்டது.

இயக்குநர் அல்லது உற்பத்தி மற்றும் பல்வேறு அனல் மின் நிலையங்களின் தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்கள் ஆகியோர் தலைமையில் பல்வேறு குழுக்களாகப் பிரித்து வெளி மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட கனரக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதின் காரணமாக அனல்மின் நிலையத்தின் 5 அலகுகளையும் மிகக்குறுகிய காலத்தில் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தியைத் துவங்கி இச்சாதனையைச் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: 2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு - திமுக அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.