ETV Bharat / state

6 நாட்களாக நடைபெற்ற தூத்துக்குடி மீனவர்களின் போராட்டம் வாபஸ்! - Fisherman protest withdrawn

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 9:35 PM IST

mp-kanimozhi-and-vijay-vasanth-negotiations-with-thoothukudi-fishermen-had-a-smooth-outcome-protest-was-withdrawn-after-6-days
தூத்துக்குடி மீனவர்கள் உடனான எம்.பி கனிமொழி, எம்.பி விஜய் வசந்த் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு.. 6 நாட்களுக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Thoothukudi Fisherman Roadblock protest: தூத்துக்குடி கடல் பகுதியில் இரவு நேரங்களில் கேரள மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும், தூத்துக்குடி மீனவர்களையும் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி பகுதி மீனவர்கள் போராட்டம் 6 நாட்களுக்குப் பின் எம்.பி கனிமொழி மற்றும் எம்.பி விஜய் வசந்த் பேச்சு வார்த்தைக்குப் பின் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: கேரள மீனவர்கள் மற்றும் கன்னியாகுமரி, குளச்சல் பகுதி மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன்பிடிக்கக் கூடிய விசைப்படகுகளைக் கொண்டு, தூத்துக்குடி கடல் பகுதியில் இரவு நேரங்களில் மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும். மேலும், தூத்துக்குடி மீனவர்களையும் ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள மற்றும் குளச்சல் பகுதி மீனவர்களின் 6 படகுகளைச் சிறை பிடித்து தூத்துக்குடி பகுதி மீனவர்கள் 6 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.

தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்கும் எல்லைப் பகுதியில், கேரள மற்றும் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 6 ஆழ்கடல் சென்று மீன்பிடிக்கக் கூடிய விசைப்படகுகளில், 86 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, அவர்களை தூத்துக்குடி மீனவர்கள், அவர்களின் படகுகளுடன் சிறைபிடித்தனர். இதனை எதிர்த்து, கன்னியாகுமரி குளச்சல் பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து கேரள மற்றும் குளச்சல் மீனவர்களைச் சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர் போஸ்கோ என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, தூத்துக்குடி மீனவர்கள் கடற்கரைச் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பாதுகாப்பிற்காக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடி மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அந்த பகுதிக்கு வந்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது கைது செய்த மீனவர் போஸ்கோவை உடனடியாக விடுவிக்க வேண்டும், மேலும், தூத்துக்குடி மீனவர்களையும் ஆழ் கடல் சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும், இல்லை என்றால் கேரள மற்றும் குளச்சல் பகுதி மீனவர்களின் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க மாட்டோம் எனவும், தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாகவும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்ற உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மீனவர்கள் தெரிவித்தனர்.

பின்னர், பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமைச்சர் கீதா ஜீவன், மீனவர்களிடம் இது தேர்தல் நேரம், தேர்தல் முடிந்த பின்பு பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். அதற்கு மீனவர்கள், தாங்கள் இந்த கோரிக்கையை 20 ஆண்டுகளாக வைத்துப் போராடி வருகிறோம், இல்லையென்றால் கடிதம் மூலம் எழுதிக் கொடுத்து எங்களுக்கு உறுதி அளிக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டு தங்களுக்கு பதில் கூறுவதாகத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து அமைச்சர் கீதா ஜீவன் சென்று விட்டார். தொடர்ந்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தூத்துக்குடி மீனவர்கள் போராட்டத்தினால் விசைப்படகு துறைமுக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம் தொடர்பாக, திமுக எம்.பி கனிமொழி மற்றும் காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர் போஸ்கோவை விடுதலை செய்வதாக தெரிவித்ததையடுத்து, தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்து வைத்திருந்த கேரள மற்றும் குளச்சல் மீனவர்களின் 6 படகுகளை விடுவிப்பதாகவும், நாளை (மார்ச் 25) முதல் வழக்கம் போல் மீன் பிடிக்கச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து 6 நாட்கள் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு.. காரணம் என்ன? - ADMK Candidate Jayavardhan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.