ETV Bharat / state

கேரளா மீனவர்கள் உள்ளிட்ட 73 பேரை சிறைபிடித்த தூத்துக்குடி மீனவர்கள் - நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 20, 2024, 12:44 PM IST

Thoothukudi fishermen issue
Thoothukudi fishermen issue

Thoothukudi fishermen issue: தூத்துக்குடி கடலில் எல்லைத்தாண்டி அத்துமீறி வந்து மீன்பிடித்தாக கேரளா மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் 73 பேரையும் அவர்களது 6 விசைப்படகுகளையும் தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி: கேரளா பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் இரவு நேரங்களில் தூத்துக்குடி எல்லைப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிப்பதால் தங்களது மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாவும் நீண்ட நாட்களாக தூத்துக்குடி மீனவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

அத்துமீறி இம்மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் சுமார் 280-க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்றிரவு 10.00 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 விசைப்படகுகளில் தூத்துக்குடி மீனவர்கள் சென்றிருந்தனர். அப்போது, துறைமுகத்திலிருந்து சுமார் 26 கடல் மைல் தொலைவில் கேரளா மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, கேரளாவைச் சேர்ந்த 1 விசைப்படகையும் அதிலிருந்த 13 மீனவர்கள் மீனவர்களையும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தைச் சேர்ந்த 5 விசைப்படகுகளையும் அதிலிருந்த 73 மீனவர்கள் என மொத்தம் 6 விசைப்படகுகள் 86 மீனவர்களை தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடித்தனர். பின்னர், சிறைபிடிக்கப்பட்டவர்களை இன்று புதன்கிழமை அதிகாலை சுமார் 5.00 மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுத்கதிற்கு கொண்டு வந்தனர்.

கடலில் மீனவர்களுக்குள் சிறைபிடிக்கும் போது ஏற்பட்ட தகராறில், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டினம் பகுதியைச் சேர்ந்த சேசுரத்தினம் மகன் பெனெட்டிக் (54) என்பவருக்கு தலையின் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கெனி என்பவருக்கு இடது முழங்கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. மேற்படி சிறைபிடிக்கப்பட்ட 6 படகுகளையும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி விட்டு அதில் உள்ள 86 மீனவர்களையும் துறைமுக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக சங்கத்திற்கும் மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மீனவர்கள் தொழில் செய்யும் கடல் பகுதியில் அத்துமீறி வந்து மீன்பிடித்ததாக கேரள மாநில விசைப்படகு மற்றும் 5 குளச்சல் மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த விசைப்படகுகள், 86 மீனவர்களுடன் நடுக்கடலில் சிறைபிடித்து கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் கடத்தப்பட்ட 4 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் மீட்பு.. தென்மண்டல ஐஜி கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.