ETV Bharat / state

"ஆரூரா.. தியாகேசா" முழக்கத்துடன் திருவாரூர் ஆழித்தேரோட்டம்.. ஆழித்தேரின் சிறப்பு என்ன? - THIYAGARAJAR AAZHI THER FESTIVAL

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 1:34 PM IST

Thiruvarur Thiyagarajar temple: திருவாரூரில் கோலாகலமாக தொடங்கிய தியாகராஜர் கோயில் ஆழித்தேர் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

Thiruvarur Thiyagarajar temple
Thiruvarur Thiyagarajar temple

Thiruvarur Thiyagarajar temple

திருவாரூர்: உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர திருவிழா பிப்ரவரி மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற்ற நிலையில், நேற்று (மார்ச்.20) இரவு தியாகராஜ சுவாமி அஜபா நடனத்துடன் திருத்தேரில் எழுந்தருளினார்.

பங்குனி உத்திர திருவிழாவில் முக்கிய திருவிழாவான ஆழித்தேரோட்டம் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இந்த தேரினை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, வேளா குறிச்சி ஆதினம் ஆகியோர் தேரை வடம் பிடித்துத் தொடங்கி வைத்தனர்.

இந்த திருவிழாவைக் காண்பதற்காகத் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். ஆரூரா தியாகேசா என பக்தர்கள் முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கு முன்னதாக காலை 5 மணிக்கு விநாயகர் தேர், 5.30 மணி அளவில் சுப்பிரமணிய தேர் அதனைத் தொடர்ந்து ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.

மேலும், இந்த தேரோட்டத் திருவிழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நான்கு வீதிகளிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாகக் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயில் மற்றும் தேரின் சிறப்பு: பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோயிலின் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. மேலும், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

அலங்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடி, எடை 300 டன், திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்புச் சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களைக் கொண்டு கட்டப்பட்டு, கீற்று வேய்ந்து 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சேலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க, 4 வீதிகளில் வீதியுலா வரும் அழகும் காண்போர் வியக்கத்தக்கது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஏப்.13 முதல் கோடை விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Tamil Nadu Schools Summer Holiday

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.