ETV Bharat / state

காவிரி விவகாரத்தில் கர்நாடக விசிகவின் நிலை என்ன? - பிறமாநில போட்டி அறிவிப்பில் திருமாவளவன் பதில்! - VCK to contest 6 states

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 4:46 PM IST

Updated : Mar 24, 2024, 9:52 PM IST

தமிழ்நாடு, கேரளா உட்பட 6 மாநிலங்களில் விசிக போட்டி
தமிழ்நாடு, கேரளா உட்பட 6 மாநிலங்களில் விசிக போட்டி

Thirumavalavan: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளா உள்பட 6 மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

திருமாவளவன்

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிமுகம் செய்து வைத்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் விசிக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இதில், சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் விசிக பானை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டைத் தவிர மேலும் 4 மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. தெலங்கானாவில் 17 தொகுதிகளில் 10 தொகுதிகள், கர்நாடகாவில் 6 தொகுதிகள், கேரளாவில் 5 தொகுதிகள் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு தொகுதி ஆகியவற்றில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில், தெலங்கானா 10 தொகுதிகளில் 2 பெண்கள், 2 ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் 1 பழங்குடியின வேட்பாளருக்கு வாய்ப்பு” என இந்த 4 மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.

மேலும் பேசிய திருமாவளவன், “இதில் தெலங்கானா பாஜக மாநிலத் தலைவர் கிஷான் ரெட்டி போட்டியிடும் செகந்திராபாத் தொகுதியில் பகிதிபல்லி சிம்சன் போட்டியிடுகிறார். ஆந்திராவில் மட்டும்தான் இந்தியா கூட்டணி காங்கிரஸ் உடன் இருக்கிறது. பிற மாநிலங்களில் அப்படி சூழ்நிலை காணவில்லை. அதனால், திட்டமிட்டவாறு அந்தந்த மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு விசிக முடிவு செய்துள்ளது.

இந்த தொகுதிகளில், விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம், காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஒய்.எஸ்.ஆர்.சர்மிளாவுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். ஆந்திர பிரதேசத்தில் மார்ச் 27ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், தனித்தனியாக தேர்தல் அறிக்கைகள் அந்தந்த மாநிலங்களுக்கு வெளியிடப்படும்.

காவேரி விவகாரம்: காவேரி பிரச்னையில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு கர்நாடகம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது தான். ஆனால், கர்நாடகாவில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்பது கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும். காவேரி விவகாரத்தில் முரண்பாடான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. காவிரி பிரச்னைக்கு இறுதித் தீர்வு என்பது மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம்: தேர்தல் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்தியா கூட்டணிக்கு ஆதரவான நிலை தேசிய அளவில் உருவாகி இருக்கிறது. தோல்வி பயத்தால் பாஜக எதிர்கட்சிகளின் மீது அடக்குமுறைகளை ஏவுகிறது. இரண்டு முதலமைச்சர்களை கைது செய்யும் அளவுக்கு பாசிசம் தலைவிரித்தாடுகிறது.

தேர்தல் பத்திர ஊழல்: தேர்தல் பத்திர ஊழல் என்பது, இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய ஊழலாகும். சட்டப்பூர்வமாக இந்த ஊழலை பாஜக அங்கீகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசியல் தலைவர்களை, அமலாக்கத்துறை, வருவாய்த்துறை மூலமாக பாஜக அச்சுறுத்தி வருகிறது. தேர்தல் பத்திரத்தின் ஊழல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்திருக்கிறது.

அதிமுகவை, பாஜக கூட்டணியில் இணைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அவர்களால் 2019ஆம் ஆண்டு உருவாக்கிய கூட்டணி போல உருவாக்க முடியவில்லை. பாஜகவின் நோக்கம், அதிமுகவை தனிமைப்படுத்துவது தான். அதிமுக தொண்டர்கள் இதை உணர்ந்து கொள்வது தேவையான ஒன்று. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். பாஜக வாக்கு வங்கி சதவீதத்தை உயர்த்திக் காட்டுவதற்கு முயற்சிக்கிறது.

இந்தியா கூட்டணி: இந்தியா கூட்டணியால் தான் இந்த தேசம், ஜனநாயகம், அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க முடியும். இது இந்தியா கூட்டணிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையேயான தேர்தல் அல்ல. பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையேயான யுத்தம் அல்ல. ஆர்எஸ்எஸ் சங்பரிவார்களுக்கும், இந்திய மக்களுக்கும், மக்கள் விரோத சக்திகளுக்கும் இடையே நடைபெறுகிற மாபெரும் யுத்தம். இதில் போராடுகிற மக்களுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியும், விசிகவும் இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவின் 40 வேட்பாளர்களும் ஒரே மேடையில்..திருச்சியில் பிரசாரத்தை துவங்குகிறார் எடப்பாடி பழனிசாமி - Edappadi K Palaniswami

Last Updated :Mar 24, 2024, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.