ETV Bharat / state

சேலம் இரு தரப்பினருக்கிடையே மோதல்: விசிக சார்பில் 8ஆம் தேதி ஆர்ப்பாட்டம்! - VCK announced Protest in salem

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2024, 5:51 PM IST

VCK announced Protest: சேலத்தில் மாரியம்மன் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விசிக தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படம்
விசிக தலைவர் தொல் திருமாவளவன் புகைப்படம் (credit to Etv Bharat tamil nadu)

சேலம்: சேலத்தில் இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதல்கள் குறித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தீவட்டிபட்டியில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சாதியவாத சமூகவிரோதிகள் ஆதிதிராவிட மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

காவல்துறையினரும் வழக்கம் போல பாதிக்கப்பட்ட எளிய ஆதிதிராவிட மக்கள் மீதே தாக்குதல் நடத்தி தமது அதிகார மேலாதிக்க ஆணவப்போக்கை வெளிப்படுத்தியுள்ளனர். சாதிவெறியர்களின் கல் வீச்சிலும் காவல்துறையினரின் தடியடித் தாக்குதலிலும், படுகாயமடைந்த ஆதிதிராவிடர்கள் பலரைப் பொய்வழக்கில் கைதுசெய்து சிறைப்படுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் திருவிழாவில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பாரும் பங்கேற்பது வழக்கமான ஒன்றே ஆகும். ஆனால், இந்த ஆண்டு திருவிழாவில் ஆதிதிராவிடர்கள் பங்கேற்க கூடாது என பாமக தரப்பைச் சார்ந்த சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கடந்த மே.2ஆம் தேதி அன்று இருதரப்பினரையும் அழைத்து அமைதிக்கான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், சுமூகமான தீர்வு எட்டவில்லை. எனவே, தேரோட்டம் - திருவிழா நடத்தக்கூடாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆதிதிராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவனைச் சாதிவெறியர்கள் தாக்கியுள்ளனர். மண்டையில் பலத்தக் காயத்துடன் தப்பியுள்ளான். அவனுடன் இருந்த பிற இளைஞர்கள் மீதும் சரளைக் கற்களை வீசி தாக்கியுள்ளனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள கடைகளில் தீ வைத்துள்ளனர்.

இந்த வன்முறை வெறியாட்டம் காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடந்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதி வெறிக் கும்பலைக் கட்டுப்படுத்தாத காவல்துறையினர் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புக்குள்ளே புகுந்து அப்பாவி மக்களை இழிவாக ஏசியும் பேசியும் அடித்து இழுத்துச்சென்று 14 பேரைக் கைது செய்துள்ளனர்.

சாதி வெறியர்கள் தாக்கியதிலும், காவல்துறையினர் தாக்கியதிலும் பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மற்றும் பலர் என்னும் பெயரில் ஆதிதிராவிட இளைஞர்களைக் கைது செய்வதில் காவல்துறையினர் இன்னும் தீவிரம் தீட்டி வருகின்றனர்.

காவல்துறையின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

அத்துடன், மாரியம்மன் கோயிலில் வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விசிக கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி மே 8ஆம் தேதி சேலத்தில் விசிக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எல்லை தாண்டிய இன்ஸ்டாகிராம் மோகம்.. மனைவியைக் கொலை செய்த கணவர்.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - Husband Killed Wife In Thoothukudi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.