ETV Bharat / state

கண்டமனூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.. 4 ஆண்டுகளாக முறையான குடிநீர் வசதி இல்லாததால் ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 9:26 PM IST

Updated : Feb 22, 2024, 10:44 PM IST

தேனி
தேனி

Theni Gandamanur Drinking Water Problems: தேனி மாவட்டம் கண்டமனூரில் 4 ஆண்டுகளாக முறையாகக் குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டமனூரில் காலி குடங்களுடன் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.. 4 ஆண்டுகளாக முறையான குடிநீர் வசதி இல்லாததால் ஆவேசம்!

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் உள்ள 12 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.

கண்டமனூர் ஊராட்சியில் கண்டமனூர், ஆத்துக்காடு, ஏழாயிரம் பண்ணை, புது ராமச்சந்திராபுரம் ஆகிய கிராமங்களில் கடந்த 4 ஆண்டுகளாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், 15 நாட்களுக்கு ஒருமுறையே விநியோகிக்கப்படும் குடிநீர் போதுமான அளவு விநியோகிக்கப்படாமல் பற்றாக்குறையாக விநியோகிக்கப்படுகிறது என்றும் புகார் கூறப்படுகிறது.

அதேபோல் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம், கழிவுநீர் வாய்க்கால், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். தினமும் கழிவுநீர் வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளைப் பல ஆண்டுகளாகக் கிராம மக்கள் வலியுறுத்தியும் செய்து தரப்படவில்லை எனக் கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

குடிநீர்ப் பற்றாக்குறையை கண்டமனூர் ஊராட்சி நிர்வாகம் சரிசெய்ய முடியாததால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 36 லட்ச ரூபாய் செலவில் 2 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அந்த மேல்நிலைத் தொட்டி பணிகளும் சரிவரக் கட்டப்படாமல் சோதனை ஓட்டத்தின் போது தண்ணீர் கசிந்ததால் தற்போது வரை அது பயன்பாட்டிற்கு வரவில்லை. அதனால் கண்டமனூர் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது.

இது குறித்து கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகம் முதல் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் கடந்த 4 ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று (பிப்.22) கண்டமனூர், வருசநாடு சாலை ஓரத்தில் காலிக்குடங்குடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குடிநீர் முறையாக விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொள்வோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், 4 ஆண்டுகளாக முறையாகக் குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "காடு என்றால் காடுதான்"- நீலகிரி காடுகளை பாதுகாத்த உச்சநீதிமன்றம்: 25 ஆண்டு ஆனாலும் அதுதான் தீர்ப்பு!

Last Updated :Feb 22, 2024, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.