ETV Bharat / state

"வனவாசம் சென்றவர் அப்படியே சென்றிருக்க வேண்டியதுதானே,," - டிடிவி தினகரனை விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன்! - Thanga Tamilselvan Vs TTV

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 27, 2024, 3:37 PM IST

Theni Constituency DMK candidate: தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், வனவாசம் சென்றவர் அப்படியே சென்றிருக்க வேண்டியதுதானே என்றும், 14 ஆண்டுகளுக்குப் பின் வந்தால் தொகுதி மக்களின் குறைகள் குறித்து எப்படி தெரியும் என்றும் டிடிவி தினகரனை விமர்சித்துள்ளார்.

Theni Constituency DMK candidate
Theni Constituency DMK candidate

தேனி: 2024 நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றுடன் நிறைவடைந்தது. ஆகவே, அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக களம் காணும் 21 தொகுதிகளில் ஒன்றான தேனி தொகுதியில் போட்டியிட, திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்காக தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்க தமிழ்ச்செல்வன் வந்தார்.

முன்னதாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, கூட்டணி கட்சித் தலைவர்கள், ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஊர்வலமாக வந்தனர். பின்னர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்க தமிழ்ச்செல்வன் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தங்க தமிழ்ச்செல்வன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன், "முதலமைச்சர் செய்துள்ள சாதனையின் காரணமாக நிச்சயம் தேனி தொகுதியில் நான் வெற்றி பெறுவேன். வனவாசம் போன டிடிவி தினகரன் அப்படியே போக வேண்டியது தானே. ஏன் மீண்டும் வந்தார் என்று தெரியவில்லை. மக்களை தினமும் பார்த்தால்தான், அவர்களின் குறைகளைக் கண்டறிந்து, அவர்களுக்காக பணி செய்ய முடியும்.

14 வருடம் கழித்து வந்தால், மக்களுக்கு என்ன தேவை, அவர்களின் குறை என்ன என்பது குறித்து எப்படி தெரியும்" என விமர்சித்தார். மேலும், “இந்திய கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்களை தேர்தல் முடிந்த பிறகு நாங்கள் தேர்ந்தெடுப்போம். அதிமுகவை மீட்பதற்கு டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரே சின்னத்தில் நின்றிருக்க வேண்டும். ஆனால், பாஜக பக்கம் டிடிவி தினகரனும், சுயேட்சையாக அதிமுகவும் போட்டியிடுவது நாடகம் போன்று உள்ளது. ஆகவே, அவர்களுக்கு தோல்வி நிச்சயம். மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.582.95 கோடி வைத்துள்ள ஆற்றல் அசோக்குமார்.. ஈரோடு திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு? - Aatral Ashok Kumar Assert

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.