விசாரணை கைதிகளின் பல் பிடுங்கிய விவகாரம்: அமுதா ஐஏஎஸ்-ன் விசாரணையில் நீதிமன்றம் புது உத்தரவு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2024, 5:43 PM IST

Balveer Singh Case

Balveer Singh Case: விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சம்பவம் நடைபெற்ற நாளின் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணை அறிக்கையை வழங்கக் கோரிய மனுவில், விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். அதில், "அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் என்மீது, பொய்யான வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோத காவலில் வைத்து காவல்துறை அதிகாரிகள் என்னைக் கடுமையாகத் தாக்கினர்.

அப்போது என்னுடைய நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில் நான் மட்டுமன்றி, விசாரணை கைதிகள் மேலும் சிலரது பற்களையும் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பிடுங்கி சித்ரவதை செய்தார். ஆகவே, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் மார்ச் 10 அன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை எனக்கு வழங்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன் ஆஜராகி, தமிழ்நாடு அரசின் சிறப்பு விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் அதிகாரியின் விசாரணை அறிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. மேலும் சிசிடிவி சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை அடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹென்றி, இந்த வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்றத்தில் அமுதா ஐஏஎஸ் அறிக்கை தருவதாக ஏற்கனவே அரசு தரப்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதனை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அமுதா ஐஏஎஸ் அறிக்கையை மனுதாரர் வசம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் சிசிடிவி காட்சிகள் வழங்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக இயங்கிய 134 இறால் பண்ணைகளுக்கு சீல் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.