சென்னை: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில், சட்ட விதிகளுக்கு முரணாகவும், உரிய அனுமதியை பெறாமல் செயல்பட்டு வந்த இறால் பண்ணைகளை மூடும்படி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.
அப்போது, மத்திய அரசின் கடலோர மீன்வளர்ப்பு ஆணைய சட்டப்படி, கடலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தான் இறால் பண்ணைகளை அமைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளதாகவும், மனுதாரர்களின் இறால் பண்ணைகள் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய அனுமதிகளைப் பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த பண்ணைகளை மூட உத்தரவிட்டதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 709 இறால் பண்ணைகள் உள்ளதாகவும், அவற்றில் 2 ஆயிரத்து 227 பண்ணைகள் மட்டும் பதிவு செய்யப்பட்டவை எனவும், 348 பண்ணைகளின் அனுமதி கோரிய விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், 134 பண்ணைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அனுமதியின்றி செயல்பட்ட மனுதாரர்களின் இறால் பண்ணைகளை மூடும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்த நீதிபதி, தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளை மூடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிரடியாக உத்தரவிட்டார்.
அதேபோல சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தியவர்களுக்கு எதிராக 6 வாரங்களில் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இந்த காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.