ETV Bharat / state

நாடாளுமன்ற தேர்தல்: 108 ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ்! - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 19, 2024, 12:53 PM IST

Bishop Devadass Ambrose
LOK SABHA ELECTION 2024

Bishop Devadass Ambrose: தஞ்சாவூர் மறைமாவட்ட முன்னாள் ஆயர் தேவதாஸ் ஆம்புரோஸ், உடல்நலக் குறைவு காரணமாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு தனது வாக்கினை பதிவு செய்தார்.

ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

தஞ்சாவூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் 950 வேட்பாளர்களும், புதுச்சேரி தொகுதியில் 26 வேட்பாளர்களும் களம் காண்கின்றனர்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியானது, தஞ்சாவூர் , திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில், 7 லட்சத்து 27ஆயிரத்து 166 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 73 ஆயிரத்து 932 பெண் வாக்காளர்கள் மற்றும் 128 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 15 லட்சத்து, ஆயிரத்து 226 வாக்காளர்கள் உள்ளனர்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை செலுத்தி வருகின்றனர். அவற்றில் தஞ்சை யாகப்பா நகரில் தனியார் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹுமாயூன் கபீர் வாக்களித்துள்ளார். அதேபோல், தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தேமுதிக வேட்பாளர் சிவனேசன் தனது குடும்பத்தினருடன் வருகை புரிந்து தங்களது வாக்கினை செலுத்தியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, திமுக மேயர் இராமநாதன், தஞ்சை கூட்டுறவு காலணி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் குடும்பத்தினருடன் வருகை புரிந்து வாக்களித்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வரும் தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் எம்.தேவதாஸ் ஆம்புரோஸ், தனது ஜனநாயக கடமையை செலுத்துவதற்காக, சேவா சமாஜம் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வருகை புரிந்தார்.

பின்னர், சக்கர நாற்காலியில் மறை மாவட்ட ஆயர் அமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வாக்குப்பதிவு செய்த அவர் பின்னர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். அதேபோல், முதல் வாக்காளராக கல்லூரி மாணவி நந்தினி தேதி தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: வாக்குச்சாவடிக்கு செல்போனுடன் செல்லலாமா? கெடுபிடி காட்டும் போலீசார் - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.