ETV Bharat / state

திமுக - அதிமுக ஆட்சியால்தான் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது - தமிமுன் அன்சாரி பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 2:22 PM IST

மாஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேச்சு
தமிழகத்தில் நான்காவதாக வரக்கூடிய ஒரு அணிதான் பாஜக

Thamimun Ansari about BJP: மக்களின் மனதை சஞ்சலப்படுத்தும் வகையிலும் 400 தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுவதால், பிற கட்சிகள் மட்டுமின்றி, மக்களுக்கும் ஓட்டு இயந்திரம் மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

தமிழகத்தில் நான்காவதாக வரக்கூடிய ஒரு அணிதான் பாஜக

மயிலாடுதுறை: மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம், நேற்று (பிப்.28) மயிலாடுதுறையில் நடைபெற்றது. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மனிதநேய ஜனநாயக கட்சி 9ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினோம். சோதனைகளை எல்லாம் சாதனையாக்கி, அதிகார மையங்கள் நோக்கிய வெற்றிப்பயணம் தொடங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

வரும் 2024 லோக்சபா தேர்தலில், கட்சி எத்தகைய நிலைபாடு எடுக்க வேண்டுமென்று தீர்மானத்தை தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் வழங்குவதென்றும், அரசியல் சூழலைக் கொண்டு தலைமை நிர்வாகக்குழு முடிவெடுக்க பொதுக்குழு அறிவுறுத்தியுள்ளது. இன்றைய சூழலில், எந்த கட்சியிலும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. தலைமை நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறும். அதில் எங்களுக்கான வாய்ப்பு என்ன என்பதை பற்றி ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம்.

கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. தவறான வதந்திகள் பரவுகிறது. இந்தியாவின் அரசியல் மரபுகளை நாசம் செய்யும் பாஜக இருக்கும் கூட்டணியில் நிச்சயம் இடம்பெற மாட்டோம். தமிழகத்தில் 4-வதாக வரக்கூடிய ஒரு அணிதான் பாஜக. மூப்பனார் பின்பற்றிய மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்பாட்டில் ஜி.கே.வாசன் ஈடுபடுகிறார். அவரது கட்சியை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.

மதில்மேல் பூனை போன்று இருக்கக்கூடிய மக்களை இழுக்கும் வகையிலும், மக்களை மனசஞ்சலப்படுத்தும் வகையிலும் 400 தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பாஜகவினர் கூறுகின்றனர். இவிஎம் மெஷினில் ஒப்புகைச் சீட்டை கண்டிப்பாக வழங்க வேண்டும். ஒப்புகைச் சீட்டை சரிபார்ப்பதன் மூலமாக, தேர்தல் முடிவை வெளியிட வேண்டும். பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளுக்கும் ஓட்டு மெஷின் மீது அய்யப்பாடு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் தன்னுடைய தந்திர விளையாட்டை நகர்த்துகிறார். அதிமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திமுக, அதிமுக மாறிமாறி ஆட்சியில் இருந்ததால்தான், இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதற்கு காரணம் அண்ணா மற்றும் பெரியார் வழிகாட்டிய திராவிட அரசியல்.

ரயில்வே துறைக்கு தனியாக பட்ஜெட் போடப்பட்டதை பாஜக அரசு நிறுத்தியது. வந்தே பாரத் என்ற பெயரில், ரயில்வேக்கு அமைச்சர் இருக்கிறாரா என்று தெரியாத அளவிற்கு பிரதமர்தான் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரயில்வே துறையில் ஏற்பட்டுள்ள அசௌரியங்களை மனதில் வைத்து, லோக்சபா தேர்தலில் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள்” என்றார்.

மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ‘கண்டா வர சொல்லுங்க எம்.பியை காணவில்லை’ என‌ ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு, “மக்கள்தொகை அதிகரித்துவிட்ட நிலையில், 6 சட்டமன்றத்திற்கு ஒரு எம்பி என்பது சாத்தியமில்லாதது. 3 சட்டமன்றத்திற்கு ஒரு எம்பி என்று கொண்டு வந்தால், சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்க முடியும். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொகுதிக்கே ஏதாவது எம்பி வராமல் இருந்தால், மக்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை.

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல காட்சிகள் மாறலாம், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தனர். பின் பாஜகவில் இருந்த வெளிவரும்போது, அதனை நாங்கள் வரவேற்றோம்” என்றார்.

இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.