ETV Bharat / state

"பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக ஆட்சியில் பெற முடியாவிட்டால் வேறு ஆட்சியில் பெற முடியாது" - ஆசிரியர் முன்னேற்றச் சங்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 11:02 PM IST

old pension scheme
பழைய ஓய்வூதிய திட்டம்

old pension scheme: பழைய ஒய்வூதியத்திட்டத்தை திமுக ஆட்சியில் பெற முடியாவிட்டால் வேறு எந்த ஆட்சியிலும் பெற முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் அரசாணை 243 வெளியிட்டதற்கான நன்றி அறிவிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

மேலும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி-க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் கொண்டுவர வேண்டும்; 2004-2006 தொகுப்பூதிய காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அதேபோல, தொடக்க மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி என்பது தேவையில்லை என தமிழ்நாடு அரசு கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்; உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வைப் பழைய முறையிலேயே வழங்கிட வேண்டும்; ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலனை மீண்டும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.

இதன் தொடச்சியாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறும்போது, "தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசாணை 243 மூலம் மாநில அளவில் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் பெற்று வந்த இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணி மூப்பு பாதிக்காமல் பணியில் சேர்ந்த தேதி இனி பதவி உயர்வு மற்றும் மீண்டும் மாறுதலும் பெறலாம்.

இதுமட்டும் அல்லாது, இடைநிலை ஆசிரியர்களுக்குத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பதவி உயர்வு வழங்கப்படுகிறது.

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றாலும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியராகவே மாறுதல் பெறலாம்.

மேலும், பழைய ஒய்வூதியத்திட்டத்தை திமுக ஆட்சியில் பெற முடியாவிட்டால் வேறு எந்த ஆட்சியிலும் பெற முடியாது. ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டுவருவார்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அமலாக்கத்துறைக்கு கதவை தட்ட வேண்டிய கஷ்டம் வேண்டாம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.