ETV Bharat / state

"இனிமேல் டெல்லிதான்.. தமிழ்நாடு முனிசிபாலிட்டி போல் ஆகிவிட்டது" - தம்பிதுரை ஆவேசம்! - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 12:27 PM IST

Aiadmk Election Campaign
Admk Thambithurai

AIADMK Election Campaign: இந்தியாவின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிப்பது டெல்லிதான், அங்குதான் எல்லா சட்டமும், திட்டமும் நிறைவேற்றப்பட்டு பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது என அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை பேசியுள்ளார்.

அதிமுக தம்பிதுரை பேச்சு

திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில், அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகர் பகுதிகளான கன்னிகாபுரம், புதுமனை, ரெட்டித்தோப்பு, கம்பிக்கொல்லை ஆகிய பகுதிகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பேசுகையில், "தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடைபெறுகின்ற தேர்தலில், ஒரு குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசை விரட்டியடித்து, வருகின்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இன்றைக்கு விலைவாசி, மின்கட்டணம் வரி எல்லாம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத, கையாளாகாத அரசு தமிழ்நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “எதிரே போட்டியிடக்கூடிய திமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள். அவர்களுக்கு வாக்களித்தால், அவர்களை சந்திக்கக் கூட முடியாது. தேர்தலில் காசு கொடுத்துவிட்டு வெற்றி பெற்றால் அவர்களைக் காணவே முடியாது. அதிமுக வேட்பாளர் அரசுப் பணியைத் துறந்து மக்கள் பணி செய்ய வந்துள்ளார். எனவே சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து, தம்பிதுரை பேசுகையில், “ஸ்டாலின் சொன்னதை ஏதும் செய்யவில்லை. எனக்கு டெல்லியில் இருந்து பணம் வரவில்லையென்று கூறுகிறார். அதற்காக போராடுவோம் என கூறுகிறார். அதற்கு என்ன அர்த்தம்? நமக்கு பணம் வேண்டும் என்றால் டெல்லிக்குத்தான் செல்ல வேண்டும்.

திமுக எம்.பிக்கள் 5 வருடம் டெல்லிக்குச் சென்று என்ன செய்தார்கள்? ஸ்டாலினே கூறுகிறார், டெல்லி ஏதும் செய்யவில்லையென்று. இந்த மாதிரியான கையாளாகாத எம்.பிக்களை டெல்லிக்கு அனுப்பி வைத்தால் எந்த வேலையும் நடக்காது.

டெல்லியில் தான் எல்லா திட்டமும் நடக்கிறது, இனிமேல் டெல்லிதான் ஆட்சி, தமிழ்நாடு முனிசிபாலிட்டி போல் ஆகிவிட்டது, அதிகாரம் ஏதும் இல்லை. இன்றைய இந்தியாவின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிப்பது டெல்லிதான், அங்குதான் எல்லாம் சட்டமும், திட்டமும் நிறைவேற்றப்பட்டு, பட்ஜெட் ஒதுக்கப்படுகிறது. அந்த பணம் தான் இங்கு வருகிறது.

தமிழ்நாட்டிற்கு போதிய நிதியையும், திட்டங்களையும் பெற வேண்டும் என்றால், நம்முடைய எம்.பிதான் போராட வேண்டும். அது அதிமுக எம்.பிக்களால் தான் முடியும், திமுக எம்.பியால் முடியாது. அதற்கு நம்முடைய அதிமுக வேட்பாளர் பசுபதிக்கு வாக்களிக்க வேண்டும்" என்று பேசினார்.

இதையும் படிங்க: கேரளா போலீஸ் தேடிவந்த தலைமறைவு குற்றவாளி..சென்னையில் சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.