ETV Bharat / state

“தமிழ்நாட்டில் நீர் ஆதாரங்கள் பறிபோய் கொண்டிருக்கிறது”.. பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்! - protest against Kerala government

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 9:13 PM IST

P.R.Pandian about Farmers protest : சிலந்தி ஆற்றுக்கு நடுவே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள அரசுக்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர்களும், விவசாயிகளும் ஒன்றிணைத்து ஒன்பது ஆற்று டோல்கேட்டை முற்றுகையிட உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பி.ஆர்.பாண்டியன் புகைப்படம்
பி.ஆர்.பாண்டியன் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று (மே 25) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நதிநீர் உரிமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள், விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பி.ஆர்.பாண்டியன் பேட்டி (credits - ETV Bharat Tamil Nadu)

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த இக்குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “தமிழ்நாட்டில் காவிரி, பாலாறு, தென்பெண்ணை, சிறுவாணி, அமராவதி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோய் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு இதனைத் தட்டி கேட்பதற்கு தயங்குகிறது. சிறுவாணி ஆற்றிற்கு நடுவே இரண்டு ஆண்டுகளுக்குள் புதிய அணையை கேரள மாநிலம் கட்டியுள்ளது.

2015ஆம் ஆண்டு கேரள மாநிலம் அணையை கட்டிக் கொள்வதற்கு கர்நாடக மாநிலம் அனுமதி அளித்தபோது, அன்றைய தினம் அதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர், பின் அந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற்றது. ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கேரள மாநிலம் அங்கு 2 அணைகளை கட்டி, சிறுவாணியின் குறுக்கே தண்ணீர் வருவதை தடுத்து நிறுத்தி உள்ளது.

அதேபோல், அமராவதி நதியின் குறுக்கே சிலந்தி ஆற்றில் சட்டவிரோதமாக கேரள அரசு அணை கட்டியிருக்கிறது. எந்த அரசாங்கமும் தன் விருப்பத்திற்கு அணை கட்ட முடியாது. கீழ் பாசன விவசாயிகள் கருத்துக்களை கேட்காமல் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது, காவிரி மேலாண்மை திட்டத்தில் அனுமதி இல்லாமல் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. நாம் பெறுகிற இடத்தில் இருக்கின்ற பொழுது, காவிரி மேலாண்மை ஆணையத்தைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரம் தமிழக அரசிடம் உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சட்ட விரோதமாக பிப்ரவரி 1ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசின் ஒப்புதலோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கூறுகிறார். இதுவரை தமிழக முதலமைச்சர் வாய் திறக்கவில்லை.

அதேபோல், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசிற்கு கேரள அரசு விண்ணப்பம் அளித்துள்ளது. மே 4ஆம் தேதி அதற்காக ஒரு தனிக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதனை நிறைவேற்றுவதற்கு சாரங்கபாணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

ஒவ்வொரு நீராகாரங்களும் பறிபோகிறது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய் திறக்க மறுக்கிறார். ஒட்டுமொத்தமாக விளைநிலங்களை அழித்துவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பதற்கு திமுக அரசு கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து கைகோர்த்து நடை போடுகிறதோ என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு பாசன விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்களைக் கொண்ட ஒத்த கருத்துடைய அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழுவை உருவாக்குவதற்கும், உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் முயற்சி எடுத்திருக்கிறோம். அந்த வகையில், கொங்கு மண்டல நீர் ஆதார உரிமை மீட்புக் குழுவை இன்று உருவாக்க இருக்கிறோம்.

வருகிற ஜூன் 13ஆம் தேதி ஒன்பது ஆற்று டோல்கேட்டை கேரளா அரசுக்கு எதிராகவும், சிலந்தி ஆற்றுக்கு நடுவே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் சிறுவாணியில் கட்டப்பட்டு இருக்கக்கூடிய அணையை உடைத்தெறிய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவர்களும், விவசாயிகளும் ஒன்றிணைத்து முற்றுகை இடுவது என முடிவெடுத்துள்ளனர்.

அதற்கு முன்னதாக, மே 28ஆம் தேதி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்காக அன்றைய தினம் ஆய்வைத் துவங்க உள்ள நிலையில், அதே நாளில் மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்த குழுவை ரத்து செய்ய வலியுறுத்துவோம்.

மேலும், நீதிமன்றம் கூறியுள்ள பல்வேறு தீர்ப்புகளை திமுக அரசாங்கம் நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த பொழுது கேரளா அரசு உடன் இணைந்து பேசி, இப்பிரச்னைகளுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அந்தக் குழுவின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. எனவே அந்தக் குழுவில் விவசாயிகளையும், சமூக ஆர்வலர்களையும் இணைக்க வேண்டும். மேலும், இவ்வகாரத்தில் வலிமையான போராட்டங்களை முன்னெடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “பருப்பு இருப்பு இல்லை..” இரண்டு மாதங்களாக அலைக்கழிக்கப்படும் மக்கள்? - மயிலாடுதுறையில் நடப்பது என்ன? - Ration Shop No Stock Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.