ETV Bharat / state

"ஓராயிரம் விஜய் வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது" - நடிகர் ரஞ்சித் பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 6:57 PM IST

நடிகர் ரஞ்சித் பேட்டி
நடிகர் ரஞ்சித் பேட்டி

Actor Ranjith: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது எனவும், அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும், அந்த வாய்ப்பு கிடைத்தால்தான் அண்ணாமலை யார் என்பதை நிரூபிக்க முடியும் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 5வது மாநில மாநாடு

கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு ஸ்டுடியோ சிறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "நடிகை த்ரிஷா விவகாரத்தில் யாரையும் தனிப்பட்ட முறையில் தெரியாது. நாகரிகம் என்பது எல்லோருக்கும் அடங்கிய ஒரு விஷயம். எல்லாரும் செய்யும் வேலை போன்று நடிப்பு என்பதும் ஒரு வேலையே.

மானம் மரியாதை என்பது உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சரி, பூ விற்கும் ஒரு பெண் என்றாலும் சரி, மானம், மரியாதை என்பது ஒரு உயர்ந்த பண்பு. வைரல் கன்டென்ட் என்பதற்காக கூவத்தூர் விவகாரத்தை பேசியது அருவருக்கத்தக்க விஷயம். பொதுவாகவே கூத்தாடிகள் என்ற கண்ணோட்டம் மக்களுக்கு இருக்கிறது. நிஜ வாழ்க்கையில் நடிக்காத ஆள் இல்லை. இப்படி மனதை காயப்படுத்தும்படி அவர் பேசியது கண்டிக்கத்தக்கது.

இது போன்ற பேச்சு, அரசியல் மீது ஒரு அருவருக்கத்தக்க எண்ணத்தைக் கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறை இளைஞர்கள் படித்துவிட்டு அரசியலுக்கு வர வேண்டும். இந்த மாதிரி அரசியல் என்றாலே சாக்கடை. குடித்துவிட்டு இப்படித்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை வளர்க்கிறது. இது போன்ற பேச்சுக்களை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் தனது முழு ஆதரவும் த்ரிஷாவிற்கு உள்ளது.

தமிழ்நாட்டில் 100க்கு 90 சதவிகிதம் மதுதான் இருக்கிறது. தமிழகத்தில் அரிசி விவசாயம் போய், மது விவசாயம்தான் தற்போது உள்ளது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசாங்கம் அமைக்கும் போதும், மதுவை படிப்படியாக குறைபோம் என்று கூறிவிட்டு கடைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்குப் பதிலாக, கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அரசாங்கமே மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என விளம்பரப்படுத்தி விட்டு, அவர்களே அதனை ஊக்குவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆரம்பித்தது முதல் மதுவை ஒழிப்போம், புகையிலை ஒழிப்போம் என்றார்கள், ஒழித்தார்களா? கல்வி இலவசம், மருத்துவம் இலவசம் என்று கூறினார்கள், செய்தார்களா? ஓட்டுக்கு 10,000 ரூபாய் 12,000 ரூபாய் என பணம் வாங்கிக் கொண்டு கேவலமாக திருடர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்காதீர்கள். ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள். அந்த மாற்றம் என்ன என்று உங்களுக்கே தெரியும். எனவே, வாக்கை புறக்கணிக்காமல் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களியுங்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் பதவிகளுக்காகவும், பணத்திற்காகவும் சிலர் கட்சி மாறுவது உண்டு. விஜயதாரணி பாஜகவிற்கு மாறியது என்ன காரணத்திற்கு என்று எனக்கு தெரியவில்லை. ஒரு நல்லாட்சி அமைய வேண்டும், நல்ல மாற்றம் வர வேண்டும் என்று மக்களோடு மக்களாக தனக்கும் ஒரு சிந்தனை உண்டு.

ஏற்கனவே திருடியவர்கள் மட்டுமே திருடிக் கொண்டிருக்க வேண்டும். புதிதாக யாரும் அரசியலுக்கு வரக்கூடாது என்று புதிதாக அரசியலுக்கு வருபவர்களை தூற்றுவதாகவும், ஒரு விஜய் அல்ல, ஓர் ஆயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை மாற்ற முடியாது. இதுவரை வாக்குறுதி கொடுத்தவர்கள் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று எந்த நீதிமன்றமும் அவர்களை தண்டிக்கவில்லை.

மக்களிடம் தவறான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் யாரும், தவறான வாக்குறுதிகளை கொடுத்து விட்டோம் என்று நினைக்கவில்லை. அப்படி அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டால், அவரது பெயரை நெஞ்சில் பச்சை குத்திக் கொள்வேன்.

உடல்நிலை மட்டும் ஒத்துப் போயிருந்தால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது வரை போராடிக் கொண்டுதான் இருந்திருப்பார். அரசியல் மிகப்பெரிய வியாபாரம். அனைத்து தரப்பு மக்களுமே கடன் பெற்று, அதனை அடைத்து வரும் நிலையில், எம்எல்ஏ, அமைச்சர் போன்றோர் சைக்கிளில் வந்து வாக்கு கேட்டு இன்று பல லட்சம் கோடிகளை வைத்துள்ளார்கள்.

அரசியல் ஒரு கடை. அதற்கு எதிரே வேறு யாராவது கடை போட்டு விட்டால், அந்த கடையை எப்படி அடைப்பது என்று எண்ணி, புதிதாக நல்லவர்கள் யாராவது வந்தால், ஒன்று தங்கள் கூட்டணியில் இணைத்து விடுவார்கள் அல்லது அவர் மீது சாக்கடையை வீசி தனிமனித வன்மத்தைக் கூறி அவர்களை அழித்து விடுவார்கள்.

இன்று தமிழ்நாட்டில் கஞ்சா பழக்கம் அதிகரித்துள்ளது. கல்வி நிறுவனங்கள் முன்பாக போதைப் பொருட்கள் சிதறிக் கிடப்பது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது போன்ற கலாச்சார சீரழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றை பாதுகாக்க வேண்டும். மக்களைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் நேசிப்பவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக எனக்கு இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை செய்வேன்.

மேலும் நடிகர் என்ற அடிப்படையில் பல கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்கின்றார்கள். ஏற்கனவே சில அரசியல் கட்சிகளில் இருந்து அனுபவங்கள் உள்ளதால் கொள்ளையடித்த எவருக்கும் ஆதரவாக பேச மாட்டேன். எத்தனை கோடி கொடுத்தாலும் நேர்மையானவர்களுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் என எண்ணுகிறேன்.

அரசியல் என்பது ஒரு கடை. அந்த கடையில் வியாபாரம் நடப்பதை மட்டுமே பார்ப்பார்கள். மக்களை யாருமே பார்க்க மாட்டார்கள். வாக்குக்காக இஸ்லாமியர் நோன்பு நிகழ்ச்சிகளில் குல்லா அணிந்து அமர்வதும், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளில் தேவாலயத்தில் சென்று அமர்ந்து கொள்வதும் ஒரு நாடகம் தான். இதனை ஒரு காமெடியாக பார்க்கிறேன்.

நடைபெற உள்ள தேர்தல் முடிந்ததற்கு பிறகுதான் தமிழகத்தில் பாஜகவிற்கான வாக்கு வங்கி உயர்ந்ததா என்பது தெரியும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அந்த வாய்ப்பு கிடைத்தால்தான் அண்ணாமலை யார் என்பதை நிரூபிக்க முடியும்.

அவர் ஒரு திறமையான ஐபிஎஸ் அதிகாரி. எந்த விஷயத்திலும் துணிச்சலாக செயல்படக்கூடியவர். அப்படிப்பட்ட ஒரு அதிகாரி, பதவியை துறந்து மக்களுக்காக பொது வாழ்க்கைக்கு வருகிறார் என்றால், அது ஒரு சிறந்த அடிப்படைதான்.

அதிமுகவை பொறுத்தவரை, 'தன் வினை தன்னைச் சுடும்' என்பது போல், நாம் என்ன செய்கிறோமோ அது நம்மை அறுக்கும். இது பாஜக, திமுக, அதிமுக அனைத்துக்குமே பொதுவான ஒன்று. நாம் என்ன செய்தோமோ, அதுதான் விளையும்.

இந்தத் தேர்தலில் ஒவ்வொருவருமே கபடி கபடி என்று, தன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயல்வார்கள். பாமக தலைவர் அன்புமணியை எனக்கு மிகவும் பிடிக்கும். 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், வெளிநாடுகளிலும் பெயர் பெற்றவர். திறம்பட நிர்வாகம் செய்தவர். மதுவுக்கும், கலாச்சார சீரழிவுக்கும் எதிராக இருப்பவர். சமூக சிந்தனையுள்ள அறிவான தலைவர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேரள பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா! ஆயிரக்கணக்கான பெண்கள் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.