ETV Bharat / state

விவசாயிகள் போராட்டத்தை யாரோ தூண்டி விடுகிறார்கள்..! ஜி.கே வாசன் கருத்து!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2024, 9:07 AM IST

Tamil Maanila Congress leader GK vasan said about alliance at dindigul
ஜி.கே.வாசன் பேட்டி

கடந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த கட்சிகளோடு தமாகா நட்பு பாராட்டுவதும், வெற்றி தோல்விகள் குறித்து பேசுவதிலும் எந்த தவறும் கிடையாது எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் பேட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் களப்பணிக்கான ஆலோசனை நடைபெற்று முடிந்தது. கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளோடு தற்போது தமாகா நட்பு பாராட்டி பேசி வருகிறோம். அதன் அடிப்படையில் கட்சிகளோடும், கட்சித் தலைவர்களுடனும் வெற்றி, தோல்விகள் குறித்தும் பேசி வருவதில் எந்த தவறும் கிடையாது.

தமாகாவை பொறுத்தவரைக் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் கட்சி எனப் பெயரெடுத்தது. தமாகாவின் பலமே நேர்மை, எளிமை, தூய்மை, வெளிப்படைத்தன்மை. அதேபோல் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தமாகா முக்கிய கட்சியாக இருக்கும் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி உடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் அவரை சந்தித்து எனது கருத்துக்களை அவரிடம் கூறினேன். இது தவிர தற்போதைக்கு எதுவும் கூற முடியாது, அப்படி கூறுவது தற்போது நன்றாக இருக்காது என்றார்.

அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமே கூட்டணிக் கட்சி குறித்து முடிவு செய்கின்றனர். வெற்றி வாய்ப்பை முடிவு செய்யும் வாக்காளர்கள் தான் எஜமானர்கள்.

தேர்தல் முடிவிலே வாக்குச்சீட்டுகள் எண்ணிய பிறகு வாக்காளர்களின் எண்ணங்கள் வெளிப்படும். அதை யாரும் உறுதிப்படுத்த முடியாது. சைக்கிள் சின்னம் கிடைப்பதற்கான பணியைத் தேர்தல் ஆணையத்திடமும், உச்ச நீதிமன்றத்திலும் மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் சைக்கிள் சின்னம் கிடைக்கும் என இறைவனை வேண்டுகிறேன்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மேயர் தேர்தல் குறித்த கேள்விக்கு, இந்திய நாட்டில் அனைத்து கட்சிகளும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும். அதில் மாற்று கருத்து கிடையாது. விவசாயிகள் போராட்டம் என்பது ஒருபுறம் நியாயமானது என்றாலும், மறுபுறம் அவர்களை யார் தூண்டிவிடுவது, தேர்தல் அறிவிப்புக்கு 15 நாட்களுக்கு முன்பு ஏன் இந்த வேகம், ஏன் இந்த போராட்டம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பாஜகவை பொறுத்தவரை விவசாயிகளைச் சார்ந்த கட்சியாகவே செயல்பட்டு வருகிறது.

விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. பல திட்டங்களை அவர்கள் விவசாயிகளுக்குக் கொடுத்திருப்பதை நான் இங்கு குறிப்பிட முடியும். இவ்வளவு காலம் கழித்து தேர்தல் நேரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சில கட்சிகள் தேர்தல் தோல்வி பயத்தின் காரணமாகவே சில விவசாயி பிரதிநிதிகளைத் தூண்டி இந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பது நல்லதல்ல. இந்த விவகாரத்தை மத்திய அரசு முறையாகக் கையாளும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திண்டுக்கல், திருவாரூர், சிவகங்கையில் தொழிற்பேட்டைகள்: பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.