ETV Bharat / state

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு.. 3 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 9:39 PM IST

Etv Bharat
Etv Bharat

Drug Awareness: மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரத்தில் "நோபல் புக் ஆப் ரெக்கார்ட்" மற்றும் விக்ரம் வீரத் தமிழர் சிலம்பாட்ட கழகம் சார்பில் போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், மூன்று மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவ, மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு.. 3 மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து போலீசார் மற்றும் தன்னார்வ அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மயிலாடுதுறை அருகே மூவலூர் மகாதானபுரத்தில் "நோபல் புக் ஆப் ரெக்கார்ட்" மற்றும் விக்ரம் வீரத் தமிழர் சிலம்பாட்ட கழகம் சார்பில் போதை இல்லா சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் உலக சாதனை நிகழ்வாக மாணவ மாணவிகள் மூன்று மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.

நோபல் புக் ஆப் ரெக்கார்ட் நடுவர் அர்ஜூன் முன்னிலையில் 6 வயது முதல் 20 வயது வரை உள்ள 34 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பத்தில் உள்ள சலாம், உள்வாரல், வெளிவாரல், தலைசுத்து, போத்து, ஒற்றை வீச்சு, இரட்டை வீச்சு, கமுட்டு, அடிவரிசை போன்ற முறைகளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுகளைத் தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றினர்.

இந்த நிகழ்வில் போதைப் பொருளுக்கு எதிராக காவல்துறை சார்பில் ஒளிபரப்பப்பட்ட ஆடியோ பாடலுக்கு ஏற்றவாறு சிலம்பம் சுற்றியது பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. இதில் காவல்துறையினர், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றிய மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

'நோபல் புக் ஆப் ரெக்கார்ட்' போதைக்கு எதிரான விழிப்புணர்வு சிலம்பாட்ட நிகழ்வை உலக சாதனையாகப் பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி தலைமையில் மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து பதக்கங்கள், கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி.. ஜெய்ஸ்வாலை ஓவர் டேக் செய்த ஜடேஜா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.