ETV Bharat / state

ஈரோடு ஸ்ட்ராங் ரூம் சிசிடிவியில் திடீர் கோளாறு.. மாவட்ட ஆட்சியர் விளக்கம்! - Erode Strong Room CCTV Problem

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 30, 2024, 4:14 PM IST

Strong Room CCTV Broadcast Interrupted In Erode
Strong Room CCTV Broadcast Interrupted In Erode

Strong Room CCTV Broadcast Interrupted In Erode: ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி பதிவுகள் கட்டுப்பாட்டு அறையில் தெரியவராதது குறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரோடு: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024ல் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான கட்டுப்பாட்டு அறை சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியின் அட்மின் பிளாக்கில் செயல்பட்டு வருகிறது. இதில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குப் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா ஒளிப்பதிவுகள் தொலைக்காட்சி சாதனத்தில் தெரியவராதது குறித்த ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா பத்திரிக்கை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில், சட்ட மன்ற தொகுதி வாரியாக தனித்தனியாக மத்திய மற்றும் மாநில காவலர் மூன்று அடுக்கு பாதுகாப்பு வசதியுடனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை அட்மின் பிளாக்கில் செயல்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் தெரியும் வகையில் தொலைக்காட்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்களும் 24 நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இருப்பு அறையின் வெளிப்புற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் ஒளிப்பதிவுகள் தெரியும் வண்ணம் கூடுதலாகத் தொலைக்காட்சி சாதனங்கள் வைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (ஏப்.30) காலை சுமார் 7.00 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தொலைக்காட்சி சாதனத்தில் சிசிடிவி பதிவுகள் தெரியவில்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றது.

இந்த தகவலின் அடிப்படையில், ஈரோடு மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் வேட்பாளர் பிரதிநிதிகளுடன் ஆய்வு செய்ததில் இருப்பு அறையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதேதும் இல்லாமல் செயல்பட்டு வந்ததும், இருப்பு அறையின் வெளியே வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி சாதனத்தில் சிசிடிவி காட்சிப்பதிவுகள் இருந்துள்ளதும், இருப்பு அறையில் இருந்து அட்மின் பிளாக்கில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வரும் சிசிடிவி ஒயர் இணைப்பில் பழுது ஏற்பட்டதால் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைக்காட்சி சாதனத்தில் சிசிடிவி பதிவுகள் தெரியவில்லை என்பதும் கண்டறியப்பட்டு மேற்படி விவரங்கள் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது.

இதன் பின்பு, சிசிடிவி இணைப்புகள் சரிசெய்யப்பட்டு காலை 9.00 மணி அளவில் கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைக்காட்சி சாதனத்தில் சிசிடிவி பதிவுகள் முழுமையாகத் தெரிந்தது. இதுகுறித்து நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்ததாரருக்கு மீண்டும் சிசிடிவி இணைப்புகளைக் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாவண்ணம் இருக்கவும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. உயிர் தப்பியவர் கூறிய உறைய வைக்கும் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.