ETV Bharat / state

பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்; சைலண்டாக நழுவிய எஸ்.பி.வேலுமணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 12:33 PM IST

Etv Bharat
Etv Bharat

S.P.Velumani: கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 15 பேர் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எஸ்.பி.வேலுமணி பதிலளிக்காமலேச் சென்றார்.

எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியை, அதிமுக முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி உள் பட 8 அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்றிணைந்து நேற்று (பிப்.7) சந்தித்தனர். அப்போது, தொகுதி வாரியாக உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது, சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாகப் பங்கீடு செய்வது என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதன் பின்னர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, "கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரத்தை கேரள அரசு தடுத்து வைத்துள்ளது. தமிழக அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. மாவட்ட நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்ததைப் போல், இப்போதும் அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட மூன்றாம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளன. எனவே, அப்பணிகளையும் விரைவுபடுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" எனத் தெரிவித்தர்.

தொடர்ந்து பேசிய அவர், "கோவைக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் நடைபெறவில்லை. குறிப்பாக, ஸ்மார் சிட்டி திட்ட முழுமைபடுத்துதல், விமான நிலைய விரிவாக்கம், குடிநீர் திட்டம் என பல்வேறு திட்டங்கள் முடக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளும் விரைவுபடுத்த வேண்டும். இதனால் கோவை மாவட்டத்தின் வளர்ச்சி தடைபட்டுள்ளது.

மேலும், அத்திக்கடவு - அவினாசி திட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் 95 சதவீதம் நிறைவு பெற்று இருந்தது. மீதமுள்ள திட்டப் பணிகளை விரைவுபடுத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மனு அளித்துள்ளோம். கனிமவளக் கொள்ளை, வனவிலங்குகளின் தொந்தரவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கை இல்லாமல் உள்ளது" எனக் கூறினார்.

மேலும், "அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு, திமுகவின் பொறுப்பாளர்களால் அதிகாரிகள் மூலம், வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு இடையூறுகளை அளித்து வருகின்றனர். அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேம்பாட்டு பணிகளுக்காகவும் நிதி வழங்கப்படாத நிலை உள்ளது. அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்" எனக் கூறினார்.

இதனிடையே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு, தான் பேச வந்ததை இன்னும் முடிக்கவில்லை, முதலில் முடித்துக் கொள்கிறேன் எனக்கூறி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் தொடர்ந்து பேசி வந்தார். தான் பேசிய பிறகும்கூட செய்தியாளர்களின் கேளிவிக்கு பதிலளிக்காமல் சென்றார்.

இதையும் படிங்க: கூட்டணிக்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் அமித்ஷா! எடப்பாடி பழனிசாமிக்கு இறுதி அழைப்பா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.