ETV Bharat / state

புருளியா - விழுப்புரம் ரயில் நெல்லை வரை நீட்டிப்பு.. தென் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில்! - Southern Railway

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 12:08 PM IST

Southern Railway
தெற்கு ரயில்வே

Southern Railway: தென் மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் வட மாநிலங்களுக்கு செல்லும் விழுப்புரம் - புருளியா ரயிலை, நெல்லை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மதுரை: திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் பயனடையும் வகையில் திருவண்ணாமலை வழியாக மேற்கு வங்கம் மாநிலம் புருளியாவுக்கு, வாரம் இருமுறை ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில், இந்த ரயில் சேவையானது ஏப்ரல் 13ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திருவண்ணாமலைக்கு நேரடியாக செல்ல இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது திருநெல்வேலியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் புருளியா வரை, வாரம் இருமுறை இயக்கப்பட உள்ள இந்த ரயில், அண்ணாமலையார் பக்தர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

புருளியா - விழுப்புரம் (22605) மற்றும் விழுப்புரம் - புருளியா (22606) ஆகிய ரயில்கள், கரக்பூர், புவனேஸ்வர், விசாகப்பட்டினம், விஜயவாடா, கூடூர், ரேனிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம் வரை இயக்கப்படுகின்றன.

கடந்த 2021ஆம் ஆண்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரயில் இயக்கப்பட வேண்டும் என அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து (ABGP) என்ற அமைப்பின் மூலம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, தெற்கு ரயில்வே அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவ்வமைப்பு வலியுறுத்தியதன் காரணமாக சென்னையில் இருந்து வேலூர் வரை செல்லக்கூடிய ஒரு ரயிலை, பௌர்ணமியன்று மட்டும் கூடுதலாக திருவண்ணாமலை வரை நீட்டித்து அனுமதி அளித்திருந்தனர்.

இந்நிலையில், தற்போது புருளியா - விழுப்புரம் மற்றும் விழுப்புரம் - புருளியா செல்லக்கூடிய ரயில்களின் கால அட்டவணையில் சிறிது மாற்றம் செய்து, சென்னை அருகே பெரம்பூர், காட்பாடி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருநெல்வேலி வரை இந்த ரயில்களின் தூரத்தை தெற்கு ரயில்வே வரும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் விரிவுபடுத்த உள்ளது.

இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களுக்கு, மேற்கு வங்க மாநிலம் கரக்பூர் வரை விசாகப்பட்டினம், புவனேஸ்வர் வழியாக செல்வதற்கு கூடுதல் ரயில் சேவையாக இது அமைந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் செல்வதற்கு ஹௌரா - கன்னியாகுமரி வாராந்திர ரயில் சேவை மட்டுமே தற்போது வரை உள்ள நிலையில், தொடங்கப்பட உள்ள இந்த ரயில் சேவை கரக்பூர் வரை சென்றாலும், அங்கிருந்து கொல்கத்தா 115 கி.மீ தொலைவுதான்.

ஆகவே, கரக்பூரில் இருந்து 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்படும் மின்சார ரயில்களைப் பயன்படுத்தி பயணிகள் கொல்கத்தா செல்ல முடியும். அதுமட்டுமன்றி திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்கான முதல் நேரடி ரயில் சேவையாகவும் இது அமையவுள்ளது. காச்சிகுடா - நாகர்கோவில் ரயில் திருவண்ணாமலை வழியாக சென்றாலும்கூட, அது சிறப்பு ரயில் சேவை மட்டுமே. அது தேவைக்கேற்ப அவ்வப்போது இயக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு, திருப்பதி - ராமேஸ்வரம் (16779) மற்றும் ராமேஸ்வரம் - திருப்பதி ரயில் (16780) சேவை இருந்தாலும், அது இரவு நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. மாறாக, புருளியா வரை இயக்கப்படவுள்ள இந்த ரயில் சேவை, மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு பகல் நேர சேவையாக அமையும்.

புருளியா - விழுப்புரம் ரயில் (22605) செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.55 மணிக்கு பெரம்பூர் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலைக்கு மாலை 5.20 மணிக்கும், மதுரைக்கு அதிகாலை 1.15 மணிக்கும், திருநெல்வேலிக்கு 4.10 மணிக்கும் சென்றடையும். அதேபோன்று, விழுப்புரம் - புருளியா ரயில் (22606) புதன் மற்றும் சனிக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 3 மணிக்குப் புறப்பட்டு, மதுரைக்கு காலை 5.25 மணிக்கும், திருவண்ணாமலைக்கு பிற்பகல் 12.15 மணிக்கும், பெரம்பூருக்கு மாலை 3.40 மணிக்கும் சென்றடையும்.

மேற்கு வங்கத்திற்குச் செல்ல விரும்பும் தென் மாவட்ட மக்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைவதோடு, பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்ல விரும்புகின்ற மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த அண்ணாமலையார் பக்தர்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையாகவும் அமையும்.

இந்த ரயிலில் 3 முன் பதிவில்லா பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி மட்டுமே கொண்ட 10 பெட்டிகளும், மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் இரண்டும், இரண்டுக்கு ஏசி பெட்டி 1 என மொத்தம் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

இதையும் படிங்க: ராஜேந்திர சோழனுக்கு சிலை..படிக்க கோச்சிங் சென்டர் - அரியலூரில் பாஜக வேட்பாளரின் வாக்குறுதிகள் என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.