ETV Bharat / state

கோரிக்கைக்கு செவி சாய்க்காத மாநகராட்சி? காதில் பூச்சூடி வந்து வீட்டு வரி செலுத்திய சமூக ஆர்வலர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 1:53 PM IST

social activist paid tax in Madurai Corporation with a flower in his ear
காதில் பூச்சூடி வந்து வீட்டு வரி செலுத்திய சமூக ஆர்வலர்

Madurai Corporation: மதுரை மாநகராட்சி பகுதியில் தங்களது நெடுநாள் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாததால், காதில் பூச்சூடி மதுரை மாநகராட்சியில் சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன் வீட்டு வரி செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதில் பூச்சூடி வந்து வீட்டு வரி செலுத்திய சமூக ஆர்வலர்

மதுரை: மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் கழிவுநீர் ஓடிக் கொண்டிருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சியிடமும், மாமன்ற உறுப்பினர்களிடமும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன், தனது காதில் பூச்சூடி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (பிப்.18) வரி செலுத்தினார்.

பிறகு ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “மதுரை மாநகராட்சியில் செல்லூர் பகுதியில் தொடர்ந்து தெருக்களில் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் சாக்கடை கழிவுநீரில் தினந்தோறும் நடந்து செல்லும் அவலம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களாக இந்த பிரச்னை செல்லூர் பகுதியில் இருக்கிறது. பலமுறை மனு கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. மதுரை மாநகராட்சிக்கு தினந்தோறும் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கப்படுகிறது.

தற்காலிக தீர்வுதான் ஏற்படுகிறதே தவிர, நிரந்தரத் தீர்வு இல்லை. இந்த நிலையில், பாதாளச் சாக்கடை வரி, வீட்டு வரி, குழாய் வரி கட்டச் சொல்லி மதுரை மாநகராட்சி நிர்ப்பந்தம் செய்கிறார்கள். இல்லை என்றால், குடிநீர் இணைப்பை துண்டித்து விடுவோம் என அதிகாரிகள் நேரில் வந்து மிரட்டுகிறார்கள்.

இதனைக் கண்டித்து, மதுரை செல்லூர் பகுதியில் பாதாளச் சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளச் சாக்கடை அடைப்பிற்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டும். இதை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக, நூதன முறையில் எனது வீட்டிற்கு பாதாளச் சாக்கடை வரி செலுத்துவதற்காக, இன்று மண்டலம் 2 ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று, பாதாள ச்சாக்கடை வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதற்காக காதில் பூவுடன் கோரிக்கை அடங்கிய டீ சர்ட் உடன் சென்று வரி செலுத்தினேன்” என்றார்.

இதையும் படிங்க: "மோடியை போன்று நாடாளுமன்றத்தை அவமதித்த பிரதமர் உலகத்திலேயே யாரும் இல்லை" - ஆ.ராசா குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.